புறநானூற்றுப் பாடல்களில் காணப்படும் உடை என்னும் இச் சிறுமரத்தைக் குடை மரமென்பர். வேலமரத்தின் இனத்தைச் சார்ந்தது. மிக மிகச் சிறிய சிற்றிலைகளைக் கொண்டது. கிளைகளில் நீண்ட வலிய முட்களை உடையது.
சங்க இலக்கியப் பெயர் : உடை
தாவரப் பெயர் : அக்கேசியா பிளானி பிரான்ஸ்
- (Acacia planifrons. W. & A.)
உடை என்பது ஒரு சிறுமரம். கிளைகளில் உள்ள இலைக் கணுவில் எல்லாம் நீண்ட இரு முட்கள் இருக்கும். இதன் இலை மிகச் சிறியது; இதன் முள்ளைச் 'சுரையுடை வால்முள்' என்று கூறுவர். இந்த முள்ளை ஊகம்புல்லின் நுனியில் கோத்து அம்பு ஆக்கி அதனை வில்லில் பூட்டிக் குறவர் குடிச் சிறுவர் எலியை எய்வர் என்று கூறுவர் ஆலத்துர்கிழார்.
சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
ஊக நுண்கோல் செறித்த அம்பின் -புறநா. 324:4-5
'இருங்கடல் உடுத்த இப்பெரிய மாநிலத்தின் நடுவே, உடையினது சிறிய இலைகூடப் பிறர்க்கு உரித்தாதல் இன்றித் தாமே ஆண்ட மன்னர்கள் இடு திரை மணலினும் பலர்’ என்று சிறுவெண்தேரையார் பாடுகின்றார்.
இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவனது இடைபிறர்க்கு இன்றி
உடை குடை வேலே -பிங். நி: 2688