பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வாகை
அல்பீசியா லெபக் (Albizzia lebbeck, Benth.)

போரில் வெற்றி பெற்றோர் சூடுவது வாகை மலர்க்கொத்து. இது இலையுதிர் பெருமரம். எங்கும் வளர்கிறது. மலர் மங்கிய வெண்ணிறமானது. நெற்று நீண்டு பட்டையானது.

சங்க இலக்கியப் பெயர் : வாகை
தாவரப் பெயர் : அல்பீசியா லெபக்
(Albizzia lebbeck, Benth.)

வாகை இலக்கியம்
போரில் வெற்றி பெற்றவன் ‘வாகை சூடினான்’ என்பதே பெருவழக்காகும். வாகைப்பூவை ‘வெற்றிப்பூ’ என்று கூறும் சேந்தன் திவாகரம்.[1] போர்க்களத்தில் பேரரசர்களின் பெரும் படைகள் மோதிக் கொண்டு போர் புரிவதன்றி வேறு பல போர்களும் உண்டு. அவை ‘சொல்லானும், பாட்டானும், கூத்தானும் மல்லானும், சூதானும் பிறவற்றானும் வேறலாம்’ என்பர் நச்சினார்க்கினியர். இவ்வகையான போர்களில் வெற்றி எய்தினார் ‘வாகை’ சூடினாராவர். வாகைமலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ளது.

“வடவனம் வாகை வான்பூங் குடசம்-குறிஞ். 67

‘வாகை’ ஒரு பெரிய மரம். உயர்ந்து பரவிக் கிளைத்து வளரும். மலர் சற்று மங்கிய வெண்ணிறமானது. பளப்பளப்பானது. நறுமணமுடையது. மயிலினது குடுமி போன்ற துய்யினை உடையது. மலர்கள் கொத்தாகப் பூக்கும். கிளை நுனியில்


  1. “வெல்லுநர் அணிவாகை வெற்றிப்பூவே”
    -சேந். திவா. மரப்பெயர்