பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

17

வெண்கலததால் ஆம்பற் பூ வடிவாக அணைசு பண்ணி நுனியில் வைக்கப்பட்ட ‘புல்லாங்குழல்’ என உரை கண்டார். ஆகவே, ஆம்பல் என்பது ஒரு பண்ணென்பதும், ஒரு வகைக் குழல் என்பதும் பெற்றாம்.

இக்குழலில் இசைக்கப்படுவது ஆம்பற்பண் என்பதையும். இக்குழல் இசையைக் கோவலர் பலகாலும் மாலையில் எழுப்புவர் என்பதையும் காணலாம்.

“.... .... .... பல்வயின் கோவலர்[1]
ஆம்பலந் தீங்குழல் தெள்விளிபயிற்ற”
–குறிஞ். 221-222

என்ற இக்கபிலரின் கூற்றுக்கு, ‘இடையர் பல இடங்களிலும் நின்று ஆம்பல் என்னும் பண்ணினையுடைய அழகிய இனிய குழலிடத்து தெளிந்த ஓசையைப் பலகாலும் எழுப்ப’ என்று நச்சினார்க்கினியார் விளக்குவர். இவ்விசை வண்டின் ஒலி போன்றது; இனிமை உடையது; இரங்கி ஒலிப்பது; போரில் புண்பட்டுப் படுக்கையில் துன்புறும் வீரற்கு அமைதியைத் தருவது என்பர் இளங்கீரனார;

“இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பல் குழலின் ஏங்கி”
–நற். 113: 10-11

மேலும் இங்ஙனம் போரில் புண்பட்டுக் கிடந்தவனை ஓம்பும் சுற்றம் இல்லாவிடத்துப் பேய் சுவைக்கச் சுற்றும் என்ற நம்பிக்கையைப் ‘பேய் ஓம்பிய பேய்ப்பக்கம்’ என்பார் ஆசிரியர் தொல்காப்பியர் (புறத்திணை: 19:6). அப்புண்ணோனைப் பேயினின்றும் காக்க அவனுடைய மனைவி கிட்டுதலைக் கூறுவதைத் தொடாக் காஞ்சி என்பர். இதனை விளக்கும் ஒரு புறப்பாடலை இளம்பூரணர் இந்நூற்பாவிற்கு மேற்கோளாகக் காட்டுவார். இப்பாடலைப் பேய்க் காஞ்சி என்னும் துறையில் அரிசில்கிழார் பாடுவர்.

கணவன் புண்பட்டு வீழ்ந்து கிடக்கிறான். அவனைப் பேய் அணுகாமல் காப்பதற்குப் புறப்படும் அவனது மனையாள், தோழியைக் கூப்பிடுகிறாள். ‘வம்மோ காதலந் தோழி!’ ஐயவி தெளித்து (வெண்கடுகு), ஆம்பல் குழலை ஊதி, இசைக்கும் மணியை ஆட்டி, காஞ்சிப்பண்ணைப் பாடி, நறும்புகை எடுத்து, யாழொடு பலப்பல இசைக்கருவிகள் ஒலிக்க எமது கழற்கால்


  1. சிலப். 17 :20:2
 

73-2