பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

சங்க இலக்கியத்


மாலை போலக் கை கோத்தலை விடேமாய்’, என்றெழுதுவாராயினர்.

மேலே குறிப்பிட்ட சிறுபாணாற்றுப்படை அடிகட்கு ‘நெருங்குகின்ற தன்மை உடைய கடம்பினது இணைதல் நிறைந்த மாலை’ என்று உரை கண்டுள்ளார்.

இத்துணையும் நோக்குழி கடம்பினது பூங்கொத்து, மலர்களாற் கட்டிய கோதையைப் போலப் பூத்திருக்கும் என்பது தெளிவாகின்றது.

மேலும், இக்கடம்பினது மலரைப் பற்றிப் புலவர் பெருமக்கள் குறிப்பிடுவதையும் காண்பாம்.

“இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
 உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்”
-திருமுரு. 11

“உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே ”-பரி. 5 : 81

“உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை”
-பதிற். பதிகம். 4 : 7


இவற்றுள் ‘உருள் பூந்தண்தார் புரளும் மார்பினன்’ என்ற அடிக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர், ‘செங்கடம்பினது தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினை உடையவன்’ என்றார். ஆகவே, செங்கடம்பினது மலர், தேர்ச் சக்கரத்தை ஒத்து மிக அழகாகத் தோன்றும். வட்ட வடிவம்; நடுவில் சிறுதுளை; துளை மருங்கில் வெண்ணிறம்; அதற்கு வெளிப்புறம் இளஞ்சிவப்பு நிறம். மலரின் வட்டத்தை ஒட்டிய மிகச் சிவந்த பிசிர் போன்ற நூற்றுக் கணக்கான தாதிழைகள் நுனியில் தாதுப் பைகள்; அவைகளில் இருந்து வெளிப்படும் குங்கும நிறமான மகரந்தம். இப்பூக்கள் நீண்ட பூவிணரில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது போல மலரும். ஆதலின், இதன் இணர், கோதை போன்றது . இப்பூக்கள் பொய்கையில் மிதக்கும் காட்சியே காட்சி! புலவர்கள் கூறும் இவ்வுண்மைகளையும், நச்சினார்க்கினியர் கண்ட உரைகளையும் கொண்டு, இது செங்கடம்பு என்றும், இதன் தாவரப் பெயர் பாரிங்டோனியா அக்யுடாங்குலா என்றும் அறிய முடிந்தது. இதனுடைய தமிழ்ப் பெயர் ‘அடம்பா’ என்று குறிப்பிடுவார் காம்பிள். கடம்பு என்பது சிதைந்து, அடம்பு எனப்பட்டது போலும். இன்றும் தஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் கடம்ப மரத்தை அடம்பு,