பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

327

அடப்ப மரம் என்று கூறுவர். இதுவே தாவரவியலில் இப்பெயரை உடையதாகும்.

இதன் தாதுக்கள் நல்ல செம்மை நிறம் கொண்டவை. இத்துகள் உதிர்ந்து பரவிக் கிடப்பது அழகிய காட்சியாகும். இதனைக் கோபம் எனப்படும் இந்திர கோப வண்டின் நிறம் போன்றது என்றும், பரந்து கிடப்பது, சித்திரத்தைப் போன்று அழகியது என்றும் நத்தத்தனார் பாடினார்:

“ஓவத் தன்ன ஒண்துறை மருங்கில்
 கோவத்தன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்”

-சிறுபா. 70-71


செங்கடம்பு மலர் முருகனுக்குரிய மலராகக் கொள்ளப்பட்டது.

‘உருள்பூம் தண்தார் புரளும் மார்பினன்’ எனத் திருமுருகாற்றுப்படை குறிப்பது போன்று, பிற நூல்களும் முருகனது மார்பில் அணியப்பட்ட மாலையாக அமைந்ததைப் புலப்படுத்துகின்றன. மேலும், இது தலையிலும் சூடப்பட்டது,

“கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி”-நற். 34 : 8

முருகன் என்ற சொல்லுக்கு அழகன் என்று ஒரு பொருள். அழகனாகிய இவன் இக்கடம்பைச் சூடுவதால், மேலும் அழகு பெற்றனன் என்பார் மாங்குடி மருதனார்.

“கடம்பின் சீர்மிகு நெடுவேள் .... பேணி”
-மதுரைக் காஞ்சி. 613-614


இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘கடம்பு சூடுதலால் அழகு மிகுகின்ற முருகனை வழிபடுகையினாலே’ என்றார். இம்மலரைச் சூடுவதினாலே முருகனுக்குக் ‘கடம்பன்’ என்றொரு பெயர் அமைந்தது. இதனைப் ‘பூக்கும் கடம்பா’ என்ற தொடரால் அறியலாம். பூவைச் சூடுவதோடு கடம்ப மரத்தில் முருகன் இடம் பெறுவதாகக் கருதினார்.

“கடம்பமர் நெடுவேளன்ன”
-பெரும்பா. 75


இங்கு அமர்தல் என்பது விரும்புவதையும், இடம்பெறுவதையும் குறிக்குமென்பர்.

இங்ஙனமே இக்கடம்பு, திருமால் இடங்கொள்ளும் செய்தியைப் பரிபாடல் பகரும்.