பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

335

“மணிபுரை உருவின் காயாவும்”-கலி. 101 : 5

“மணிமருள் பூவை அணிமலர்”-அகநா. 134 : 3

“பொன்கொன்றை மணிக்காயா”-பொருந. 201

பூவை எனப்படும் இக்காயா மலர் கருநீல மணிக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்நிறத்தையே திருமாலின் நிறத்திற்கு உவமித்தனர்.

“கார், மலர்ப்பூவை, கடலை,இருள் மணி
 அவைஐந்தும் உறமும் அணிகிளர் மேனியை”
-பரி. 13 : 42-43

“பறவாப் பூவைப் பூவினாயே”-பரி. 3 : 73

“எரிமலர் சினைஇய கண்ணை பூவை
 விரிமலர் புரையும் மேனியை மேனித்
 திருஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை”
-பரி. 1 : 6-8

“நின்நாற்றமும் ஒண்மையும் பூவைஉள”-பரி. 4 : 29

“பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம்”[1]

“பூவைப் பூவண்ணன் அடி”[2]

பூவைப் பூவண்ணனின் தொடர்பாகத் தொல்காப்பியத்தில் பூவை நிலை என்ற ஓர் இலக்கணத் தொடர் அமைந்துள்ளது.

“தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்”
-தொல், பொருள். 63 : 10


இதற்கு உரை கூறிய இளம்பூரணர், ‘பூவை மலர்ச்சியாகக் கண்டு மாயோன் நிறத்தை ஒத்ததெனப் புகழ்தல்; நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச் செல்வோர் அப்பூவைக் கண்டு கூறுதல்; உன்னங் கண்டு (நிமித்தம்) கூறினாற் போல இதுவும் ஒரு வழக்கு’ என்று இதனை ஒரு வழக்காகக் குறிப்பிட்டுள்ளார். பூத்த காயாம்பூச் செடியின் மேலேறிச் செங்காந்தள் மலர்ந்திருந்தது. அக்காட்சி திருமாலின் திருமார்பில் திருமகள் தங்கியது போன்றிருந்தது. இதனைத் திருமைலாடிச் சிறுபுறவில் யாம் கண்டு தற்குறிப்பேற்றி மகிழ்ந்ததுண்டு. காயாம்பூச் செடியில்


  1. நான். க. 1
  2. திரி. 2 : 4