பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

சங்க இலக்கியத்

அனிச்சம் இலக்கியம்

‘ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்’ (குறிஞ். 62) என்று குறிஞ்சிக் கபிலர் காந்தள் மலருக்கு அடுத்தபடியாக அனிச்ச மலரைக் கூறுகின்றார். ‘அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்’ (கலி. 91 : 1) என்பது கலித்தொகை. இவ்விரு வரிகளும் முறையே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுள் காணப்படுகின்றன. அனிச்சம் என்ற பூவின் பெயரையன்றி, வேறு குறிப்புகளை இவ்வரிகளில் காணவியலவில்லை.

இவையன்றி அனிச்ச மலரைப் பற்றிய செய்திகளை மிகுத்துக் கூறுவது திருக்குறள். இந்நூல் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாயினும், அனிச்சத்தின் சிறப்பியல்பு கருதி இங்ஙனம் விரித்துரைத்தாம்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து”
-திருக்கு. 90

“நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும்
 மென்னிரள் யாம் வீழ்பவள்”
-திருக்கு. 1111

“அனிச்சம்பூக் கால்களையாப் பெய்தாள் நுசுப்பிற்கு
 நல்ல படாஅ பறை”
-திருக்கு. 1115

“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
 அடிக்கு நெருஞ்சிப் பழம்”
-திருக்கு. 1120

அனிச்சமலர் மோந்து பார்க்கும் அளவானே குழையும் தன்மையது என்று அதன் மென்மையைக் கூறுகின்றார். இதனால், மலரின் உயிர்த் தன்மையைக் காட்டுகின்றார் (90). இத்துணை மென்மையுடைய அனிச்ச மலரைக் காட்டிலும், மென்மையுடையவள் எம்மால் விரும்பப்பட்ட தலைமகள் என்று தலைவியின் மென்மையைப் புலப்படுத்துகின்றார் (1111). அனிச்ச மலருக்குக் காம்பு உண்டு என்பது அறியப்படும். அக்காம்பினை அகற்றாமல், தோழி இப்பூவினைத் தலைவியின் தலையிற் சூட்டினாள். இதனை இங்ஙனம் பெய்ததினால், அவளது இடை இதன் பளுவைத் தாங்க முடியாது இற்று விடும் என்று கூறி, மலரைக் காட்டிலும் காம்பு கனமுள்ளது என்பதையும், அனிச்ச மலர் மென்மையுடன் இலேசானது என்பதையும் புலப்படுத்துகின்றார் (1115). மேலும், அனிச்ச மலர் மாதரடிக்கு நெருஞ்சியின் முள் போன்றது என்று