பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

359

களில் ‘மராஅம்’ பேசப்படுகிறது. இவற்றிற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘மராமர’மென்றும், ‘மரவம்’ என்றும், ‘வெண் கடம்பு’ என்றும், ‘செங்கடம்பு’ என்றும் உரை கூறுவர். மராஅம் என்பதை வெண்கடம்பிற்கும், செங்கடம்பிற்கும் பொதுப் பெயராகச் சங்க நூல்கள் கூறுகின்றன. இடத்திற்கேற்றவாறு உரையாசிரியர் பொருள் கொள்வர். திருமுருகாற்றுப்படையில் ‘மராஅம்’ என்பதற்குச் செங்கடம்பு என்றும் (10-11) வெண் கடம்பு என்றும் (202), உரை வகுத்த நச்சினார்க்கினியர், மலைபடுகடாத்தில் மராஅம் என்பதற்கு ‘மரவம்’ என்று (498) பொருள் கண்டுள்ளார். மரவம் என்ற சொல் ஐங்குறுநூற்றில் (400) காணப்படுகிறது. பெரும்பாணாற்றுப்படையில் ‘வண்ணக் கடம்பின் நறுமலர்’ (203) என்பதற்கு ‘வெள்ளிய நிறத்தையுடைய கடம்பினது’ என்று உரை கூறுவர். ‘கார் நறுங்கடம்பின் கண்ணிசூடி’ என்ற நற்றிணை அடிக்கு (34 : 8) ‘செங்கடம்பினது கண்ணியைச் சூடி’ என்று கூறுவர் பின்னத்தூரார்.

‘மரா மலர்த்தார்’ என்ற பரிபாடல் அடிக்கு (15 : 20) வெண் கடம்பு என்று உரை காண்பார் பரிமேலழகர்.

‘மரா வெண்கடம்பின் பெயராகும்மே’ என்று சேந்தன் திவாகரம் கூறுமாயினும், மராஅம் என்பது வெண்கடம்பையும், செங்கடம்பையும் குறிக்கும் என்பதும், மராஅம் என்பது மரா மரம், மரவம் என்ற பெயர்களையும் குறிக்கும் என்பதும் அறியப்படும். இங்ஙனமே கடம்பு என்ற சொல்லும், வெண்கடம்பையும், செங்கடம்பையும் குறிக்கும்.

மேலும் ‘எரியுறழ் எறுழம் சுள்ளி கூவிரம்’ என்ற குறிஞ்சிப் பாட்டு அடியில் (66) வரும் ‘சுள்ளி’ என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘மராமரப்பூ’ என்று உரை கூறுவர். பிற்கால இலக்கியங்களில் வரும் சுள்ளி மரத்தை நோக்குமிடத்து இஃது ஒரு பெரிய மரமெனப் புலனாதலின், சுள்ளி என்பது வெண்கடம்பாக இருத்தலும் கூடும்.

ஆகவே வெண்கடம்பு, செங்கடம்பு, சுள்ளி முதலியவற்றைத் தனித்தனியாக விளக்க முற்படுவோம்.

‘மராஅம்’ என்பது உறுதி மிக்க பெரிய மரம். ஆலமரத்துடன் சேர்த்துப் பேசப்படுகிறது. அடிமரம் நன்கு திரண்டது. கரிய நிறமுடையது. பட்டை பொரிந்தது. கிளைகள் செந்நிறமானவை.