பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

சங்க இலக்கியத்

நிகண்டுகள் ‘தணக்கு நுணாவே’ என்றும், ‘நுணவு தணக்கே’ என்றும் கூறுவது கொண்டு தணக்கம் என்பது நுணா மரத்தைக் குறிக்கும் என்று கொள்ள வேண்டியுள்ளது.

சங்க இலக்கியங்களில் நுணா, நுணவு, நுணவம் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

“சுரும்பு களித்து ஆலும் இருஞ்சினைக்
 கருங்கால் நுணவம் கமழும் பொழுதே”
-ஐங். 352

என்பது கொண்டு, இதனைக் கரிய அடிமர்த்தையுடைய நுணா மரம் என்று கொள்ளலாம். இம்மரம் புறத்தே கருமையாகத் தோன்றினும், அகமரம் மஞ்சள் நிறமானது. மஞ்சள் நாறும் இதனை மர வணிகர் ‘தனக்கம்’ என்றும், ‘மஞ்சவட்டி’ என்றும், ‘மஞ்சநதி’ என்றும் கூறுவர். இம்மரத்தை மலையாளத்தில் மஞ்சணாத்தி, மஞ்சணாற்றி என்பர். ஆதலின், தணக்கம் என்பது நுணாவாக இருத்தல் கூடும்.

தலைவியை உடன்போக்கில் கொண்டு செல்லவிருக்கும் தலைமகன், அவளிடம் பாலை நிலப் பாதையை அறிவிக்கும் போது, செல்லும் வழியில் வெண்கடம்பு மரமும், நுணா மரமும் அலரவும், வண்டினம் பாலைப் பண்ணிசைப்பவும் கேட்கலாம் [1] என்கிறான்.

“கருங்கால் மராஅம் நுணாவோ டலர
 இருஞ்சிறை வண்டினம் பாலை முரல”
[2]

இதனால், தணக்கம் என்பது பாலை நில மரமெனவும், இளவேனிற் பருவத்தில் பூக்கும் எனவும் அறியலாம்.

“நறவுவாய் உறைக்கும் நாகுமுதிர் நுணவத்து”
-சிறுபா. 51


என்றமையின் இதன் பூவில் தேன் சிந்துவதும் ‘கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ என்றபடியால், இதில் நறுமணம் கமழும் என்பதும் அறியப்படும்.

இம்மரம், சிற்றருவியின் நீர்த்துளிகளால் மலருமெனவும், வெண்மையான பூக்களை உடையது எனவும் குடவாயிற் கீரத்தனார் கூறுவர்.


  1. நிகண்டுகள்
  2. திணை மொ. ஐம்: 16