பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

373



“சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
 கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்”
-அகநா. 34 : 1 -2

“வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்”-அகநா. 184: 7

“புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
 நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்கு பிணிஅவிழ
 காடே கம்மென்றன்றே”
-அகநா. 23 : 3-5

“போதவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்த கவினிப்
 பூவணி கொண்டன்றால் புறவே”
ーஐங். 412 : 3-4

“கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்”
-பதிற். 66 : 17


முல்லை நிலப் பூக்களான முல்லை. காயா, கொன்றை, பிடவம், தளவம் எல்லாம் நெய்தலொடும், பூவணி செய்து கவின் கொளப் பூத்த கானம் கம்மென்று நறுமணம் கமழ்ந்தது என்பர்.

“காயா, கொன்றை நெய்தல் , முல்லை
 போதவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்து கவினிப்
 பூவணி கொண் டன்றால் புறவே”
-ஐங். 412 : 1-3

“நன்றே காதலர் சென்ற ஆறே
 நிலன் அணி நெய்தல் மலர
 பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே”

-ஐங். 435


தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்த பொழுது, தலைவி வருந்த, தோழி ‘இது கார்காலமன்று; பட்டது வம்பு’ என்று கூறியதாக அமைந்தது பின் வரும் பாடல்.

“மடவ வாழி மஞ்ஞை மாயினம்
 கால மாரி பெய்தென அதனெதிர்
 ஆலலும் ஆலின பிடவும் பூக்தன.
 காரன்று இருளை தீர்க நின்படரே
 கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
 புதுநீர் கொளீஇய உகுத்தரும்
 நொதுமல் வானத்து முழங்கு குரல்கேட்டே”
-குறுந். 251

இம்மலரின் பெயரால் ஓர் ஊர் உளது. அதற்குப் பிடவூர் என்று பெயர். சோழ நாட்டில், உறையூருக்குக் கிழக்கே உள்ளது .