பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

சங்க இலக்கியத்

படையினர், வெட்சி மலரைச் சூடிச் செல்வர். ஆதலின், இது போர் மலர் எனப்படும். இது ஒரு புதர்ச்செடி; இதன் மலர் செக்கச் சிவந்த நிறமானது. கொத்துக் கொத்தாகப் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : வெட்சி
தாவரப் பெயர் : இக்சோரா காக்சினியா
(Ixora coccinea, Linn.)

இது அழகுச் செடியாகப் பூங்காவிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.

வெட்சி இலக்கியம்

வெட்சிப் பூவால் பெயர் பெற்றது வெட்சித் திணை. பகை நாட்டவரது ஆநிரைகளைக் கவரப் போகும் போது, அதன் அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடுவர்.

வெட்சி ஒரு புதர்ச் செடியாகும். இது தழைத்துக் கிளைத்துக் கானம் போலக் காட்டில் வளரும் எனவும், இதன் கிளைகள் வளைந்திருக்குமெனவும், பல அரும்புகளை உடையன எனவும், முகையவிழுங்கால், மணங்கமழும் எனவும், இம்மலர்களை மகளிர் தலையில் சூடிக் கொள்வர் எனவும் சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்.

“வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட”
புறநா. 202 : 1
“கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சித்
 தளைஅவிழ் பல்போது கமழும்
 மையிருங் கூந்தல் மடந்தை நட்பே”
-குறுந் 209 : 5-7

இக்குறுந்தொகைப் பாடலில் வரும் ‘முடச்சினை’ என்பது ‘முட்ச்சினை’ என்ற பாட பேதம் உடையது. இப்பாடத்திற்கு ‘முள்ளைப் போன்ற அரும்பினை உடைய’ என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இப்பாடம் பொருத்தமாக உள்ளது. ஏனெனில் ‘இதல் முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி’ (அகநா. 133 : 14) என்று தாமோதரனார் கூறுவர் ஆகலின், உண்மையில் வெட்சியின் அரும்பு, முள்ளை ஒத்துக் கூரியதாக இருக்கும். வெட்சி மலர் நல்ல செந்நிறமானது. வெட்சிப் பூக்களைச் சூடிக்