பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வகுளம்–மகிழம்
மிமுசாப்ஸ் இலெஞ்சி (Mimusops elengi, Linn.)

‘பசும்பிடி வகுளம்’ (குறிஞ். 70) என்றார் கபிலர். ‘வகுளம்’ என்பதற்கு ‘மகிழம்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். இதற்கு ‘இலஞ்சி’ என்ற பெயரையும் சூட்டுகின்றது சேந்தன் திவாகரம்.

மகிழ் ஒரு சிறு மரம்; என்றும் தழைத்திருக்கும். மலர், தேர் உருளையின் வடிவானது. மலரின் நடுவில் சிறு துளையிருக்கும். இம்மலர் சிறியதாயினும் நறுமணம் உடையது. வெளிர் மஞ்சள் நிறமானது.

தாவரவியலில் இதற்கு ‘மிமுசாப்ஸ் இலஞ்சி’ என்று பெயர். சேந்தன் திவாகரம் குறிப்பிடும் ‘இலஞ்சி’ என்ற வேறு பெயர் தாவரவியலில் இதற்கமைந்த சிற்றினப் பெயராகுதல் காண்க.

சங்க இலக்கியப் பெயர் : வகுளம்
பிற்கால இலக்கியப் பெயர் : மகிழ், இலஞ்சி
உலக வழக்குப் பெயர் : மகிழம்பூ, மகிழ மரம்
தாவரப் பெயர் : மிமுசாப்ஸ் இலெஞ்சி
(Mimusops elengi, Linn.)

வகுளம்-மகிழம் இலக்கியம்

மணங்கமழும் மலர்களில் மகிழம்பூவின் மணம் மகிழ்ச்சி தரும். சங்க இலக்கியத்தில் மகிழம் பூவை ‘வகுளம்’ என்பர்.

“பசும்பிடி வகுளம் பல்இணர்க் காயா-குறிஞ். 70.

என்றார் கபிலர். வகுளம் என்பதற்கு மகிழம்பூ என்று உரை வகுத்துள்ளார் நச்சினார்க்கினியர். இங்ஙனமே பரிபாடலிலும்,