பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

சங்க இலக்கியத்

ஒக்கும். இம்மலர் நறுமணம் உடையது. இதனை மகளிர் கூந்தலில் அணிவர். இதன் நறுமணத்தை விவரிக்கும் அழகிய பாடல் ஒன்று நற்றிணையில் காணப்படுகின்றது: தலைவன் பொருள் வயிற் பிரிதலுற்றான். அவன் குறிப்பறிந்த தோழி,

‘உலகம் படைத்த காலம் முதலாகப் பொருளீட்டி வாழ விரும்புவோர், தம்மை அடைக்கலம் புகுந்தாரைக் (தலைவி) காத்து உடனுறைந்து, அவளது கூந்தலின் பெரும்பயன் கொள்ளாது மறந்தனர் போலும். அவளது கதுப்பில் நறுமணம் வீசுகின்றது. வேனிற் காலத்துப் பூத்த மோசி மல்லிகை மலரையும், பாதிரியின் சிறந்த மலரையும், மாரோடத்தின் நறிய மலரையும், கொய்து ஒருங்கே அடைத்து வைத்திருந்த பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போலும், நறிய மணம் வீசும் அவளது கூந்தலில் முகம் புதைத்து நுகர்ந்து மகிழும் பெரும்பயனைத் துறக்க எண்ணினர் போலும்’ என்கிறாள்.

“உலகம் படைத்த காலை தலைவ!
 மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே
 முதிரா வேனில் எதிரிய அதிரல்
 பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்
 நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
 செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்
 அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்
 தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்
 அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது
 பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே”
-நற். 337

இச்செங்கருங்காலி மரம் மிக வலிமையானது. வேலைப்பாடுகள் கூடிய மர வேலைக்குப் பெரிதும் பயன்படுவது. இதன் மலர் பசிய மஞ்சள் நிறமானது. சிறந்த நறுமணம் உடையது.

சிறுமாரோடம்—செங்கருங்காலி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : ஹெட்டிரோமீரி, எபனேலீஸ் அகவிதழ் இணைந்தவை.