பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

407

இனி, காதல் ஒழுக்கத்திலிருந்து கற்பு ஒழுக்கத்திற்கு நடை போடும் நாடகம் ஒன்றைக் கலித்தொகையிலிருந்து காண்போம் (முல்லைக்கலி. 115).. ஓர் ஆயர் மனைக்குப் பின்புறமுள்ள அரிய கானத்தில் தலைமகன் வரவு அறிந்த தோழி தலைமகளைத் தனியே விட்டு மறைந்து நிற்கிறாள்.

களவொழுக்கத்தில் தலைப்பட்ட ஆயர் மகன் முல்லை மலரால் ஆன தொடையும் கண்ணியுஞ் சூடிக் கொண்டு, தலைவியை நாடி வருகிறான். தலைவியைக் கண்ட தலைமகன், தான் சூடியிருந்த, முல்லை மாலையிலிருந்து ஒரு பகுதியைத் துணித்து அவளிடம் கொடுக்கிறான். அவளும் அகம் மிக மகிழ்ந்து, அதனைத் தன் கூந்தலிலிட்டு மிகவும் நன்கு முடித்துக் கொண்டு, மனைக்குத் திரும்புகிறாள். அன்று மாலையில் மனையில் தலைவியின் நற்றாயும், தந்தையும் வீற்றிருக்கின்றனர். செவிலித் தாய், தலைவியின் கூந்தலை வெண்ணெய் நீவி முடிப்பதற்கு அவளது முடித்த கூந்தலை அவிழ்க்கின்றாள். முல்லை மலர்த் தொடை கீழே விழுகின்றது. அதனை எல்லோரும் காண்கின்றனர். நெருப்பைக் கையாலே தீண்டியவள் போலச் செவிலி, கையைப் பிதிர்த்துத் துடித்துப் புறம் பெயர்ந்து போகிறாள். அப்பூ வந்தவாறு எங்ஙனம் என்று வினவலும் செய்யாள்; சினத்தலும் செய்யாள்; தந்தை மருண்டார். நற்றாய் நாணுற்றுக் கவன்றாள். தலைவியோ அச்சுற்று, சந்தனம் பூசி உலர்த்தின கூந்தலை முடித்துக் கொண்டாள். நிலத்தே தாழ்ந்து கிடந்த தனது பூத்தொழில் மிக்க நீல ஆடையைக் கையாலே சிறிதேறத் தழுவிக் கொண்டாள். தளர்ந்து நடந்து பக்கத்தில் இருந்த கானகத்துள் சென்று ஒளித்துக் கொண்டாள்.

இரவெல்லாம் தமரும், ஊரவரும் கூடிப் பேசுகின்றனர். அவளை, அவனுக்கே அடை சூழத் துணிகின்றனர். இவற்றை அறிந்து கொண்ட தோழி, தலைவியைத் தேடி வருகின்றாள். தோழியிடம் தலைவி சொல்கின்றாள். ‘பிறர் காணாமல் உண்ட கள்ளின் களிப்பு, பிறர் கண்டு நடுங்கும்படியாகத் தாம் கள்ளுண்ட படியைக் காட்டிக்கொடுக்குமல்லவா? அதுபோல, யாம் மறைந்து ஒழுகிய களவொழுக்கத்தால் கையும் களவுமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டேன் தோழி!’ என்று கூறி நடுங்கி நின்றாள்.

அவளின் நடுக்கத்தைக் கண்ட தோழி அதற்குக் காரணம் கேட்கிறாள். தலைவி நடந்ததெல்லாம் கூறிப் புழுங்கி நிற்பவும், தோழி சொல்கிறாள். “அஞ்சற்க ஆயர் மகன் சூடிய முல்லைக் கண்ணியை நீ உன் கூந்தலில் முடித்துக் கொண்டாயாதலின், நீ