பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

சங்க இலக்கியத்


அவனுக்கு உரியவளாகி விட்டாய் ஆகவே, நம் தமர் எல்லாம் கூடி, உன்னை அவனுக்கே மணம் செய்விக்க முடிவு செய்து, மண விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர். மனை முற்றத்தில் மணலைப் பரப்பித் திரையிடுகின்றனர். மணக்கோலம் புனைக!” என்று கூறி, அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றாள். இதனை.

தோழி நாம் காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர
 நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்
 கரங்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய்நம்
 புல்லினத்து ஆயர்மகன் சூடி வந்ததோர்
 முல்லைஒரு காழுங்கண்ணியும் மெல்லியால்
 கூந்தலுட் பெய்து முடித்தேன்மன் தோழியாய்
 வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
 அன்னையும் அத்தனும் இல்லராயாய் நாண
 அன்னை முன் வீழ்ந்தன்று அப்பூ:
 அதனை வினவலுஞ் செய்யாள் சினவலுஞ் செய்யாள்
 நெருப்புக் கை தொட்டவர் போல விதீர்த்திட்டு
 நீங்கிப் புறங்கடைப் போயினள் யானுமென்
 சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த
 பூங்கரை நீலந்தழீஇத் தளர்பு ஒல்கிப்
 பாங்கரும் கானத்து ஒளித்தேன் அதற்கெல்லா
 ஈங்கெவன் அஞ்சுவது
 அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்நாய் ஆயின் நமரும்
 அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன்கண்
 வரைப்பின் மணல் தாழப்பெய்து திரைப்பில்
 வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்
 அல்கலும் சூழ்ந்த வினை.”
-கலி. 115

கற்பு முல்லையை விளக்கும் மற்றொரு கலித்தொகைப் பாடலும் உண்டு. ஏறுதழுவும் நிகழ்ச்சிக்கு ஓர் இளைஞன் வருகின்றான். அது காண ஓர் அழகிய ஆயர் மகளும் வருகிறாள். இளைஞன் தன்னை நோக்கி வெறித்து வந்த காளையை அடக்கப் பாய்ந்தான். அவன் அணிந்திருந்த முல்லை மாலை, காளையின் கொம்பில் சிக்கிக் கொண்டது. அது துள்ளி ஓடிய அலைப்பால், மாலை பிய்த்துக் கொண்டு பூக்கள் சிதறின. முல்லைப் பூங்கண்ணி அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயர் மகளின் கூந்தலைச் சென்று அடைந்தது. அவனிடம் உள்ளத்தைப் பறி கொடுத்த அவளும், தொலைத்த அப்பொருளைப் பெற்றது போலத் தலையில் அதனை முடித்துக் கொண்டாள். எனினும், அவளுக்கு அச்சம் பிறந்தது. தன் தலையில் முல்லைப் பூவைத் தாய் பார்த்தால்,