பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

சங்க இலக்கியத்


பெரும் புன்மாலை” (நற். 369) என்பர் நல்வெள்ளையார். அரும்பு கட்டவிழ்ந்து போதாகும். வண்டு போதவிழ்க்கும் (அகம் 74). முல்லைப் போது அலர்ந்து மலருங்கால், அச்சிறு பூவின் பெருமணம் கானெல்லாம் கமழும் என்பதைச் “சிறுவீ முல்லைப்பெரிது கமழ் அலரி” (நற். 361) எனவும், “பைங்கொடி முல்லை வீ கமழ் நெடுவழி” (அகம், 124 : 12) எனவும் கூறுவர்.

“அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப
 மென்புல முல்லை மலரும் மாலை”
-ஐங். 489

மாலையில் நகைவாய் முல்லையின் முகை வாய் திறப்ப அஞ்சிறை வண்டினம் முல்லை மலரின் தாதினை நயந்து ஊதும் என்பதும், முல்லை மலரில் தேன் பிலிற்றும் என்பதும் காணலாம்.

“அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
 முல்லை நறுமலர்த் தாது நயந்துஊத
 எல்லை போகிய புல்லென் மாலை”
-அகநா. 234 : 12-14

“தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி”
-அகநா. 391 : 5


இங்ஙனம் வண்டு வாய் திறக்கத் தாதுகுத்துத் தேன் பிலிற்றி, மணம் பரப்பும் முல்லை மலரை விழையாதார் யார்? முல்லைப் பூவைத் தனியாகவும், வண்ண வண்ணத்த பிற மலர்களை விரவிக் கண்ணியாகவும், தாராகவும், மாலையாகவும் தொடுத்து, மகளிரும் ஆடவரும் அணிவர் (பதிற். 21 : 70; கலி. 118 : 25). களவு நிலை கடந்த மகளிர் கடிமணங் கொள்ளுங்கால், சூடுவது முல்லை மலர். தொடர்ந்து கற்பு நிலையில் ஒழுகும் போது, முல்லை மலரைத் தவறாது சூட்டிக்கொள்வர் (ஐங். 408).

களவொழுக்கத்தில் மணம் புரிந்த ஒருவன் அணிந்திருந்த முல்லைக் கண்ணியின் நறுமணத்தை அவளும் பெற்றாள். பெற்ற அம்மணத்தின் தன்மையை அவள் விவரிக்கும் குறுந்தொகைப் பாட்டைப் பாடியவர் அரிசில் கிழார்.

“. . . . . . . . . . . .பகுவாய்த் தேரை
 தட்டைப் பறையிற் கறங்கும் நாடன்
 தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
 மணந் தனன்மன் என் தோளே
 இன்றும் முல்லை முகை நாறும்மே”
-குறுந். 193 : 2-6