பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

415

மணம் புரிந்து கொண்ட அவ்விருவரும் நகர்ப்புறத்தில் இல்லறம் நடத்துகின்றனர். அவளுடைய மனைக்குச் சென்ற தோழி “நீ வரையும் நாள் வரையில் நின் நலம் கெடாமல் நன்கு ஆற்றினை” என்றாள். அது கேட்ட தலைவி “அஃது என் வலியன்று, சென்ற திங்களில் நெடிய வெண்ணிலாவின் கண் அவன் என் தோள்களைத் தழுவி மணந்தான். அவன் அணிந்திருந்த முல்லை மலரின் மணம், இன்று வரை என் மேனியில் மணந்து கொண்டே இருக்கிறது” என்று கூறி மகிழ்கின்றாள்.

இத்துணைச் சிறப்புக்கும் உரியதாகிய முல்லை மலர் சூடப் படாத காலமும் உண்டு. கணவனைப் பிரிந்த மகளிர் முல்லையைச் சூடுவதில்லை. துக்க காலத்திலும் முல்லை சூடுவதில்லை.

பெருஞ்சாத்தன் என்னும் குறுநில மன்னன் ஒல்லையூரில் வாழ்ந்து வந்தான். அவன் போரில் இறந்து போனான். அவன் மாய்ந்த பின்னர், அவனது நாட்டில் முல்லை மலர் பூத்தது வழக்கம் போல். யாரும் இதனைப் பார்க்கவில்லை. அதனைப் பயன்படுத்தவுமில்லை. அப்போது அம்மன்னனிடம் பெருங் கிழமை கொண்ட புலவர் குடவாயில் கீரத்தனார் அங்கு வருகிறார். பூத்த முல்லையைப் பார்க்கின்றார். தாம் அடைந்த அவல நிலையில் “முல்லையே! அருமையானவன் இறந்தான் என நினையாமல், நீயும் பூத்துள்ளாயே, அவனை இழந்து நான் உயிரோடு இருப்பது போல் நீயும் பூத்தியோ” என்று ஓலமிடுகின்றார்.

“இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
 நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
 பாணன் சூடான்; பாடினி அணியாள்
 ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
 முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே”
-புறநா. 242

என்பதே அப்பாடல்

ஆகவே, பண்டைத் தமிழில் ஐம்புல மக்களின் வாழ்வியல் மலராகக் கருதப்பட்டது முல்லை மலர். களவியலிலும், கற்பியலிலும், மறவாழ்விலும், புறவாழ்விலும் ஏறத்தாழ பதினேழு வகையாகப் பாடப்பட்டுள்ள தனி மலர் முல்லை. சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பாடப்பட்ட மலர் முல்லை. அகத்துறையில் இதனைப் பாடிய புலவர் பெருமக்கள் முல்லை