பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



435

அரும்புகளை உடையது. ‘தளவம்’ (குறிஞ். 80) என்பதற்குச் ‘செம்முல்லை’ என்று உரை கூறுவர். பித்திகமும், தளவமும் ஏறத்தாழ ஒன்றேயாகும். இரண்டும் படர் கொடிகள். தளவத்தைச் செம்முல்லை என்றழைப்பதோடு, பிச்சிப்பூ எனவும் வழங்குவர். தாவர இயலில் இவை இரண்டும் சிறிது வேறுபாடு உடையனவாயினும், ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் என்றே கூறப்படுகின்றன. பித்திக அரும்பின் கால்கள் பசிய நிறமானவை. தளவத்தின் அரும்புகள் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமானவை. திருக்கடையூர் சிவன் கோயிலின் தல விருட்சம் பிச்சி எனப்படுகின்றது. ஆனால், இது தளவமேயாகும். இதன் அரும்பு செவ்வியதாதலின், சங்க இலக்கியம் இதனைத் தனியாகக் குறிப்பிடுகின்றது.

பித்திகம் பசிய காலை உடையதென்பர் புலவர் பெருமக்கள்.

“பைங்காற் பித்திகத்து ஆயிதழ் அலரி”-குறிஞ். 117
“செவ்வி அரும்பின் பைங்காற் பித்திகத்து”
-நெடுநல். 39


பித்திகத்தின் முகை சிவந்த புறத்தை உடையதென்றும், மாரிக் காலத்தில் மலிந்து பொழிந்த மழை கண்டு பூக்குமென்றும், இயல்பாகவே சிவந்த கண்கள், தலைவி நீராடியதால் மேலும் சிவந்து மாரிப் பித்திக முகைக்கு ஒப்பாயிற்று என்றும் கூறுவார். இவ்வுண்மை, தாவரவியலுக்கும் ஒத்துள்ளது. இதனைப் பின்வரும் அடிகளிற் காணலாம்.

“மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
 கொயல் அருநிலைஇய பெயல் ஏர்மணமுகைச்
 செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்”

(வெரிந்-புறத்தை) -அகநா. 42 : 1-3

“மாரிப்பித் திகத்து நீர்வார் கொழுமுகை”
-குறுந் .168 : 1
“பெருங்தண் மாரிப்பேதைப் பித்திகத்து
 அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே”
-குறு. 94 : 1-2

“மாரிப்பித் திகத்து ஈர்இதழ் புரையும்
 அம்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்”

-அகநா. 295 : 19-20