பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கொகுடி–(கொகுட்டம்)–கொடிமுல்லை
ஜாஸ்மினம் சாம்பக் வகை ஹேனியானம்
(Jasminum sambac,Var. heyneanum C. B. Clarke)

குறிஞ்சிக் கபிலர் தமது குறிஞ்சிப் பாட்டினுள் அதிரல், குளவி முல்லை, தளவம், மௌவல், கொகுடி, செம்மல் ஆகிய ஏழு மலர்களையும் தனித்தனியாகவே கூறுகின்றார். இவை அனைத்தும் முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தவை. தாவரவியலில் இவையனைத்தும் ஜாஸ்மினம் என்னும் பேரினத்தில் அடங்கும். இச்சொற்களுக்குப் பொருள் கூறிய உரை ஆசிரியர்கள், இவற்றை உலக வழக்கில் உள்ளவாறு முல்லை விசேடம் எனவும், காட்டு முல்லை எனவும், மல்லிகை விசேடம், காட்டு மல்லிகை எனவும் உரை கூறினார். இவருள் நச்சினார்க்கினியர் சேடல் என்பது பவழக்கால் மல்லிகை என்றாராயினும் இம்மலர் முல்லையினத்தைச் சார்ந்ததன்று. மல்லிகை மலர் சங்கவிலக்கியங்களுள் பாரிபாடலில் மட்டுமே பயிலப்படுகின்றது. அங்ங்னமே கொகுடி என்பது ‘நறுந்தண் கொகுடி’ எனக் குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே (குறிஞ். 81) கூறப்பட்டுள்ளது. கொகுடி என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘கொகுடிப்பூ’ என்றே கூறியுள்ளார். பிற்காலத்தில் இதனைக் கொகுட்டம் என்னும் ஒருவகை முல்லை என்றும் கூறுவர்.

மற்றும் கொடி முல்லை என்பதோர் மலர் உலக வழக்கில் உள்ளது. கொகுடி முல்லை[1]என்பது கொடி முல்லை என மருவி


  1. “கொகுடி முல்லை”
    -திருஞா. சம்.தே.வடகுரங்காடுதுறை: 1
    “பெருமான் கொகுடிக் கோயில்”
    -திருஞா. சம். தே. திருக்கருப்பறியலுார் 10:3
    “பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்”
    -சுந். தே. திருக்கருப்பறியலுார். 1: 11

    எனத் தேவாரத் திருமுறை கூறுவதைக் கொண்டு உ. வே. சாமிநாத அய்யர் இதனை ஒரு வகை ‘முல்லை’ என்பார். ‘இருவாட்சி, கொகுடி, பிச்சி இவை எல்லாம் கொடிப்பூவாமே’ என்று புட்ப விதிகள் கூறும்.