பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

சங்க இலக்கியத்

கொடி நுண்ணியது; திரட்சி உடையது; பல வளார்களாகச் செறிந்து படர்வது; நீண்டு படரும் பசிய நிறங்கொண்டது என்றெல்லாம் கூறுவர் புலவர் பெருமக்கள்.

“பைங்கொடி அதிரல்”-அகநா. 157 : 6

“நுண்கொடி அதிரல்”-அகநா. 237: 2 , 391 : 2

“ததர் கொடி அதிரல்”-அகநா. 289 : 2

“மாக்கொடி அதிரல்”-நற். 52:1

இக்கொடி தூறுடன் காற்றில் அசைவதை இரவில் காவலர் அசைந்து நடை போடுவதற்கு உவமையாக்கினார் நப்பூதனார்.

“அதிரல் பூத்த ஆடு கொடிப்படாஅர்
 சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு
 துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
 பெருமூ தாளர் ஏமம் சூழ”
-முல்லைப். 51-54
(சிதர் = மழைத்துளி அல்லது மெத்தென) (ஏமம் = காவல்)

மேலும் இக்கொடி வீரர் தம் புதை குழி மேல் செறிந்து படரும் எனவும் கூறப்படுகிறது. இப்புதை குழி பாலை நிலத்தில் காணப்படும். இதனை,

“உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல்
 நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்
 சுரனிடை விலங்கிய மரன்ஓங்கு இயலின்”

-அகநா. 289 : 2-4


என்பர். இது இளவேனிற் காலத்தில் பூக்கும் என்பதைப் புலப்படுத்த ஓதலாந்தையார்,

“அவரோ வாரார் தான் வந்தன்றே
 புதுப்பூ அதிரல் தாஅய்க்
 கதுப்பு அறல் அணியும் காமர்பொழுதே”
一ஐங். 345

என்று இளவேனிற் பத்தில் கூறுவர். மேலும்,

“புகர்இல் குவளைப் போதொடு தெரிஇதழ்
 வேனில் அதிரல் வேய்ந்த நின்”
-அகநா. 393 : 25-26

என மாமூலனார் இது வேனிற் காலத்தில் பூக்குமென்பார். இது இளவேனிற் காலத்தில் பூக்குமென்று பாலை பாடிய பெருங் கடுங்கோ கூறுவர்.