பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

33

என்பதற்கும் ‘இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப் பூவால் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும்’ என்றார். அன்றி ‘முழுநெறிக் குவளை’[1] என்ற சிலப்பதிகார அடிக்கு ‘இதழ் ஒடிக்கப்படாத குவளை’ என்று பொருள் கூறி மேற்கண்ட புறப்பாட்டை மேற்கோள் காட்டினர் அடியார்க்கு நல்லார். ஆதலின், செங்கழுநீர் முகையின் புறவிதழ்களை மட்டும் நீக்கித் தழை உடை புனைந்தனர் என்று அறியலாம்.

குவளைக்கண் :

நெய்தலாகிய கருங்குவளை மலரையும் செங்குவளையாகிய செங்கழுநீர் மலரையும் மகளிரது கண்களுக்கு உவமிப்பது புலவர் தம் மரபாகும்.

“பசலை யார்ந்த நம் குவளையங் கண்ணே”-குறு. 13 : 5

“கண் போல் பூத்தமை கண்டு நுண்பல்
 சிறுபா சடைய நெய்தல்”

(கருங்குவளை) -நற். 27 : 9-10
மேலும் கருங்குவளை மலர் போன்ற பிராட்டியின் கண்கள் செங்குவளை மலர் போன்று சிவந்து கருணை பூத்தன என்று குமரகுருபரர் கூறுவர்.[2]

செங்கழுநீர்ப்பூ என்பதற்குச் செவ்விய நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ என்பர் (கழு - நீண்டு வளர்ந்த வேல் போன்ற கூர்மை). இதன் அரும்பே சற்றுச் சிவந்த நிறமானது.

“கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு”

-திருமுரு. 29

செங்குவளை மலர் நல்ல கருஞ்சிவப்பு நிறமானது. கருங்குவளை மலர் வெளிர் நீல நிறமானது.

குவளைக்குப் பறியாக் குவளை என்றொரு சிறப்பு உண்டு.

“கடவுள் கற்சுனை அடையிறந் தவிழ்ந்த
 பறியாக் குவளை மலரொடு”
-நற். 34 :1-2



  1. சிலப் : 2 : 14
  2. “கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
     செங்குவளை பூத்தாள் செயலென்னே-எங்கோமான்
     பங்குற்றும் தீராப் பசப்பு”
    -சிதம்பர செய். கோவை : 24
 

73 - 4