பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 
சங்க இலக்கியத்
தாவரங்கள்


முன்னுரை


சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை 150 தாவரங்களையே குறிப்பிடும். என்னையெனில் ஒரே தாவரத்திற்கு வெவ்வேறு புலவர்கள் வெவ்வேறு பெயர்களைக் கூறியுள்ளமையின் என்க. இப்பெயர்களும் இந்நாளில் வழக்கொழிந்தமையானும் ஒரு சில பெயர்கள் திரிந்து மருவியுள்ளமையானும், ஒரு சில தாவரங்களைத் தேடி அலைந்து காண்கிலமாகலானும் ஒரு சில தாவரங்களுக்குப் பிற்கால நிகண்டுகளும், இலக்கியங்களும், உரையாசிரியர்களும், அகரமுதலிகளும், பல்வேறு பெயர்களைக் கூறுகின்றமையானும் இவற்றின் உண்மையான தாவரப் பெயர்களைக் கண்டு துணிதல் அரும்பெரும் ஆய்வுப் பணியாகி விட்டது. ஒரு சில தாவரங்களின் தாவரப் பெயர்கள் ஐயப்பாடு உடையன என்றும், ஒரு சிலவற்றின் தாவரப் பெயர்களை அறிய முடியவில்லை என்றும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.

சங்கப் புலவர்கள் பெரிதும் இத்தாவரங்களின் மலர்களைப் பற்றியே குறிப்பிடுகின்றனர். ஆயினும் இவற்றின் இயல்பு, தண்டு, இலை முதலியவற்றைக் கூறும் புலவர்களும் இல்லாமலில்லை. இவர்களுள் கோடல், கொன்றை பற்றிக் கணிமேதாவியாரும், புன்னை பற்றி உலோச்சனாரும், வரகு பற்றிக் கபிலரும் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளனர். நெய்தல், குளவி, பாலை முதலிய தாவரங்களின் தாவரப் பெயர்களைக் கண்டு பிடித்தற்கும், அவற்றை உறுதிப்படுத்தற்கும் சங்கத் தமிழ்ச் சான்றோர் கூற்றுத்தான் துணை செய்தது.

சங்க இலக்கியங்களில் ஒரு தாவரத்தைப் பற்றிப் புலவர்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துச் செய்திகளையும், தாவரவியல் முறையில் அவற்றின் வேர் முதல் விதை வரையில் ஒழுங்குபடுத்தி, தொகுத்து அவர் தம் பாடற்பகுதிகளை ஆங்காங்கே பாடல் எண், வரிகளின் எண்கள் முதலியவற்றுடன் சேர்த்து, புலவர்களின் உளப்பாங்கு சிறிதும் சிதையாது வெளிப்படுத்தும் வகையில் இலக்கிய விளக்க உரை எழுதப்பட்டுள்ளது. இதற்குக் கவிஞர் கோவை. இளஞ்சேரனாரின் ‘இலக்கியம் ஒரு பூக்காடு’ என்ற பெருநூல் பெரிதும் துணை நின்றது.