பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பாலை
ரைட்டியா டிங்டோரியா (Wrightia tinctoria,R. Brid.)

‘தில்லை பாலை கல்லிவர் முல்லை’ என்றார் கபிலர். பாலை மரம், பாலை நிலத்தில் வளரும். தொல்காப்பியம் பாலை நிலத்தைக் குறிப்பிடவில்லையாயினும் முல்லை நிலத்தியல்புகளும் குறிஞ்சி நிலத்தியல்புகளும் மாறிப் போய்ப் பாலை என்ற நிலமாகத் திரியும் என்பர் சேரமுனிவர் . இப்பாலை மரத்தின் தாவரவியல் பெயரைக் கண்டு கொள்வதற்குத் துணை புரிந்தது நற்றிணைப் பாடலாகும் (நற். 107).

சங்க இலக்கியப் பெயர் : பாலை
பிற்கால இலக்கியப் பெயர் : பாலை
உலக வழக்குப் பெயர் : வெப்பாலை, நிலமாலை
தாவரப் பெயர் : ரைட்டியா டிங்டோரியா
(Wrightia tinctoria,R. Brid.)

பாலை இலக்கியம்

தொல்காப்பியம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களைக் கூறுமாயினும் சிலப்பதிகாரம் [1] ‘முல்லையுங் குறிஞ்சியும் தம்மியல்பு திரிந்து பாலை என்பதோர் படிவங் கொள்ளு’மெனக் கூறிப் பாலை நிலத்தையும் உருவாக்கும். இவை ஐந்தும் இவற்றின் ஒழுக்கம் கருதி ஐந்திணைகள் எனவுங்


  1. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து
     நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
     பாலை என்பதோர் படிவங் கொள்ளும்.
    -சிலப். 2:11:64-66