பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

504

சங்க இலக்கியத்

கூறப்படும். இவ்வைந்திணைகட்கும் உரிப் பொருள் வகுத்துரைத்த தொல்காப்பியர், பிரிதலும், பிரிதல் நிமித்தமும் பாலைத் திணைக்கு உரிப் பொருள் என்பர்.

“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
 ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
 நேருங் காலை திணைக்குரிப் பொருளே”

-தொல் . அகத் . 16


பிரிதலும், பிரிதல் நிமித்தமும் கூறும் பாலை ஒழுக்கத்தைப் பலபடப் பகர்ந்துள்ளனர் நம் சங்கச் சான்றோர். சங்க இலக்கியத்துள் பாலைத் திணைப் பாக்களே மிகுந்துள்ளன. அகநானூற்றில் ஒற்றைப் படை எண்ணில் அமைந்த பாடல்கள் எல்லாம்–அதாவது வியமெல்லாம்–பாலைத் திணைப் பாக்கள் ஆகும். ஆதலின், அகநானூற்றில் பாலைத் திணைப் பாக்கள் இரு நூறு ஆகும். கலித்தொகையில் பாலைக் கலி முப்பத்தைந்து பாடல்களும், ஐங்குறுநூற்றில் நூறு பாக்களும் பாலைத் திணையைப் பற்றியன. இவையன்றி, ஏனைய சங்க நூல்களில் பாலைத் திணைப் பாக்கள் பல உள. பத்துப் பாட்டில் உள்ள பட்டினப்பாலை, தன் பெயரளவானே பாலை ஒழுக்கத்தை நுதலியதாகும். இதன் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகாற் பெருவளத்தான். இச்சோழ மன்னனுடைய காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்து, இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பட்டினப்பாலை என்னும் சிறந்த பாடலைப் பாடினார் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இப்பாடலுக்குப் பரிசாகப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசாகக் கொடுத்து, இதனை ஏற்றுக் கொண்டான் கரிகாற் சோழன் என்று கலிங்கத்துப் பரணி[1] கூறும். இப்பாட்டு, தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறியதாக அமைந்துள்ளது.

“முட்டாச் சிறப்பின் பட்டினம் (காவிரிப்பூம்பட்டினம்) பெறினும்
 வார்இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
 வாரேன் வாழிய நெஞ்சே”
-பட்டினப். 218-219

என்று கூறிய தலைவன், செலவிடை அழுங்குதற்குரிய காரணத்தையும் பின்வருமாறு கூறுகின்றான்.


  1. “பத்தொடு ஆறு நூறுஆயிரம் பெறப்
    பண்டு பட்டினப் பாலை கொண்டதும்”
    -கலிங்கத்துப்பரணி