இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடும்பு
ஐபோமியா பெஸ்காப்ரே (Ipomoea pescaprae.,Sweet.)
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அடும்பு’ என்பது கடற்கரை மணலில் வளரும் அடப்பங் கொடியாகும் இதன் செந்நீல மலர் மிக அழகானது.
சங்க இலக்கியப் பெயர் | : | அடும்பு |
தாவரப் பெயர் | : | ஐபோமியா பெஸ்காப்ரே (Ipomoea pescaprae.,Sweet.) |
ஆங்கிலப் பெயர் | : | ஆட்டுக் குளம்புக்கொடி (Goats foot creeper) |
அடும்பு இலக்கியம்
இதனைக் ‘குதிரைக் குளம்புக் கொடி’ என்று சற்றுத் தவறுதலாகக் கூறுவர். எனினும், இதன் இலை மானின் குளம்பு போன்று இரு பிளவாக இருத்தலின் குறுந்தொகைப் புலவர் இதன் இலையை ‘மானடியன்ன கவட்டிலை’ என்றார்.
“அடும்பு அமர்ஆத்தி நெடுங்கொடி அவரை”-குறிஞ். 87
என்று கபிலர் கூறும் ‘அடும்பு’ ஒரு கொடியாகும். இதற்கு நச்சினார்க்கினியர் ‘அடும்பம்பூ’ எனவும்,
“வறள் அடும்பின் மலர் மலைந்தும்”
என்புழி. ‘மணலிலே படர்ந்த அடப்பம்பூ’ எனவும்
“அடும்பிவர் அணி எக்கர்”-கலி, 132 : 16
என்புழி ‘அடும்பங்கொடி படர்ந்த இடுமணலிலே’ எனவும் உரை கூறுவாராயினர்.