பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கூதளம்
ஐபோமியா செபியாரியா (Ipomoea sepiaria,Koen.)

கூதளம் என்னும் கொடி வெண்ணிற மலர்களை உடையது எனவும். இது ‘வெண்கூதாளம்’ எனப்படும் எனவும், நறுமணம் உடையது எனவும், குறுகிய காம்பினை உடையது எனவும், பெருந்தண் சாரலில் வளரும் எனவும். கார்காலத்தில் பூக்கும் எனவும், மலர் ‘காம்பினை’ உடையது எனவும், இதனால் மலர்ந்த பின்னர் காம்பிலிருந்து மடல் கழன்று விழும் எனவும் இம்மலரைத் தனித்தும் கண்ணியாகப் பிற மலர்களுடன் தொடுத்தும் தெய்வத்திற்குச் சூட்டுவதோடு ஆடவரும் மகளிரும் அணிவர் எனவும் சங்க நூல்கள் கூறுகின்றன. இதனை ஒத்த ‘செங்கூதாளம்’ என்ற வேறு ஒரு கொடியும் உண்டு. தாவரவியலார் இவை இரண்டு கொடிகளையும் ஒரே சிற்றினத்தில் அடக்குவர்.

சங்க இலக்கியப் பெயர் : கூதளம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கூதளி, வெண்கூதாளம், தாளி
பிற்கால இலக்கியப் பெயர் : கூதாளி, கூதாளம், வெண்டாளி, செங்கூதாளம்
உலக வழக்குப் பெயர் : தாளிக்கொடி, தாளக்கொடி, வெண்டாளி
தாவரப் பெயர் : ஐபோமியா செபியாரியா
(Ipomoea sepiaria,Koen.)

கூதளம் இலக்கியம்

கூதாளி என்னும் கொடியைக் குறிக்கும் இச்சொல் இகர இறுதி கெட்டுக் ‘கூதாள்’ என்றாகி, அம் விகுதி பெற்றுக் ‘கூதாளம்’ எனவும், குறுகிக் ‘கூதளி’ எனவும் படும் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். எழுத்து: 247 உரை). இது ‘கூதளி,