பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

525

மேலும் இதனைக் குறுமலர் என்பர் பூக்காட்டாசிரியர். புதர் போன்று வளர்ந்த குன்றில், இவ்வெண் கூதாளப்பூ மலர்ந்திருப்பதற்குப் புதரின் கிளையில் வெண்மையான இறகுகளை உடைய குருகு அமர்ந்திருப்பதை உவமை கூறுவர்.

“பைம்புதல் நளிசினைக் குருகு இருந்தன்ன
 வன்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து”

—அகநா. 178: 8-9


இவ்வுவமையை எடுத்து மொழிகின்றார் அவ்வையார். கூதளம் பூவால் கட்டிய மாலையை வானத்தில் விசி எறிந்தாற் போன்று, பசிய கால்களை உடைய வெண்குருகு தன் சிறகை விரித்து வானத்துப் பறந்தது என்பார்.

“விசும்பு விசைத்து எழுந்தகூதளங் கோதையின்
 பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ”

—அகநா. 273: 1-2


கூதள மலரின் தாது பொன் நிறமானது. இப்பூவில் உராய்ந்து போன ஒரு பன்றியின் முதுகில் இப்பொன் தாது படிந்தது. பன்றியின் முதுகு பொன்னை உரைத்துப் பார்க்கும் (உரை கல்) கட்டளைக் கல்லாகி விட்டது என்பர் பரணர்.

“வன்பிணி அவிழ்ந்த வெண்கூதாள மொடு
 அலங்குகுலை அலரி தீண்டித் தாதுஉக
 பொன்னுரை கட்டளைக் கடுப்பக் காண்வர”

—அகநா. 178 : 9-11


இனி, சிலப்பதிகாரத்தில் செங்கூதாளமும் பேசப்படுகின்றது.

“சிறுமலைச் சிலம்பின் செங்கூதாளமோடு”[1]
“செண்பகம் கருவிளம் செங்கூதாளம்”[2]
“விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும்”[3]

என வருவன காண்க. இது வெண்கூதாளத்தைப் பெரிதும் ஒத்த வேறு ஒரு வகையான கொடி. மலர் நிறம் மட்டும் இளஞ்சிவப்பாக இருக்கும். தாவரவியலில் இவை இரண்டும் ஒரே பெயரில் வழங்கப்படும் இருவேறு கொடிகளாகும்.

 

  1. சிலப். 14 : 88
  2. சிலப். 22 : 40
  3. சிலப். 13 : 156