பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

531

மகரந்த வட்டம் : 5 தாதிழைகளின் அடியில் நுண்மயிர் உண்டு. இழைகள் 5-7 செ. மீ. நீளமிருக்கும். ஐபோமியா வகையான நுண்முள்ளுடைய புறவுறைத் தாது உருண்டையானது.
சூலக வட்டம் : இரு சூலிலைச் சூலகம். 4 சூல்கள். சூல்தண்டு 1 செ. மீ. நீளமான இழை போன்றது. சூல்முடி குல்லாய் போன்றது.
கனி : 4 வால்வுகளை உடைய காப்சூல், 4 விதைகள்.

இத்தாவரக் குடும்பத்தில் 47 பேரினங்களும், 1100 சிற்றினங்களும் உலகின் வெப்பமான பகுதிகளில் வளர்கின்றன. ஐபோமியா என்ற இப்பேரினத்தில் 24 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன. ஐபோமியா பட்டடாஸ் என்ற இச்சருக்கரை வள்ளிக் கொடி இதன் கிழங்கிற்காகப் பயிரிடப்படுகின்றது. இக்கொடியின் பக்க வேர்கள் பருத்து இனிய கிழங்காகும். இதில் பல வகைகள் உள. இராச வள்ளி யாழ்ப்பாணத்தில் பயிர் செய்யப்படுகிறது. ஊதா நிறமான உருண்டை வடிவான கிழங்கு மிக இனிப்பானது. பெருவள்ளி, சிறுவள்ளி, மரவள்ளி என்ற வள்ளிப் பெயர் பெற்ற கிழங்குச் செடிகள் வெவ்வேறு தாவரக் குடும்பத்தின் பாற்படுவன. சருக்கரை வள்ளியின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 84 எனக் கானோ என்பவரும், 2n = 90 எனக் கிங் ஜே. ஆர். ராம்பேர்டு (1937) ராவ் என். எஸ். (1947) டிங், கேர் (1953) ஷர்மா ஏ. கே. டட்டா. பி. சி (1958) என்போரும் குறிப்பிட்டுள்ளனர்.