பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

39

இக்கொடி பூசனைக்காகத் தில்லையிலும், அழகுக்காவும் ஆய்வுக்காகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தாவரத்தோட்டத்தின் சிறு குட்டையிலும் வளர்க்கப்பட்டு வந்தது. இதனுடன் கருங்குவளையாகிய நெய்தலும் சேர்த்தே வளர்க்கப்பட்டது. இம்மலர்களில் நல்லதொரு மணமுண்டு. இவை மிக அழகான மலர்கள்.

கழுநீர்மாலை கடவுளுக்கு அணிவிக்கச் செங்கழுநீர் மலரையும், ‘குவளைக்கண்ணி’யாகிய அம்மைக்கு அணிவிக்கக் கருங்குவளையையும் விரும்பி இக்கொடிகள் தக்க கண்காணிப்புடன் வளர்க்கப்பட்டன.

திருவாரூரில் கோயில் கொண்டருளிய கடவுளர் திருமேனிக்கு நாளும் ஒவ்வொரு செங்கழுநீர்ப் பூச்சூட்டி வழிபாடு நிகழ்கின்றது. அதற்கென்று பண்டைய நாளில் அக்கோயிலின் புறத்தே செங்கழுநீர் ஓடை ஒன்றிருந்ததாம். அது இப்போது இல்லாமையால் அண்மையிலுள்ள செங்கழுநீர்ச் சிற்றோடையிலிருந்து நாள்தோறும் ஒரு செங்கழுநீர்ப் பூவைக் கொணர்ந்து சூட்டுகின்றனர்.

நீலமும் காவியும்

கருங்குவளையாகிய நெய்தலின் வேறு பெயர்களே நீலமும், காவியும் என்ப.

“அரக்கிதழ்க் குவளையொடு நீலம் நீடி”-பெரும்பா. 293

“அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்”-கலி. 91:1

என நீலப்பூவும்,

“கழியகாவி குற்றும் கடல
 வெண்டலைப் புணரி ஆடியும்”
-குறுந். 144

“கழியே சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப”

-அகநா. 350 : 1

“காவியங் கண்ணியாய்”[1]

“காவியங் கண்ணார் கட்டுரை”[2]

“சீர்வளர் காவிகள்”[3]

எனக் காவி மலரும் சுனைப் பூக்களாகக் குறிப்பிடப்படுகின்றன


  1. சீ. சிந். 316
  2. சிலம்பு. 14-138
  3. திருக்கோ. 1