பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பகன்றை
ஆப்பர்குலைனா டர்பீத்தம்
(Operculina turpethum,Silva Monso.)

சங்க இலக்கியங்களில் ‘மணமிலகமழும்’ பூ ஒன்று கூறப்படுகின்றது. அதுதான் பகன்றைப் பூ இது ஒரு சிறு கொடி. தூய வெண்ணிறமான மலர்களை உடையது.

சங்க இலக்கியப் பெயர் : பகன்றை
தாவரப் பெயர் : ஆப்பர்குலைனா டர்பீத்தம்
(Operculina turpethum,Silva Monso.)

பகன்றை இலக்கியம்

சங்க இலக்கியத்தில் பகன்றை ஒரு கொடியெனப் பேசப்படுகின்றது.

‘இலர் பகன்றை’ ‘கொழுங்கொடிப் பகன்றை’ என்பர். இது பனித்துறையில் புதல்தொறும் வளர்ந்து பூக்கும். இதன் இலை பெரியது.

பேரிலைப்பகன்றை-குறுந் . 330 : 4
பாசிலைப் பொதுளிய புதல்தொறும் பகன்றை-அகநா 217 : 6
பனித்துறைப் பகன்றை-பதிற்று. 26 : 12
பனித்துறைப் பகன்றை-புறநா. 235 : 18
அகன்துறை அணிபெற புதலொடு தாழ்ந்த
 பகன்றைப் பூவுற நீண்ட பாசடைத் தாமரை
-கலி. 73 : 1-2

பகன்றையின் முகைக்கு நல்லதொரு உவமை கூறுவர் கழார்க்கீரன் எயிற்றியனார். நீரில் முறுக்குப் பிரியாமல் கிடக்கும் துணியைப் போன்று பகன்றையின் வெண்மையான முகை திருகியதாகக் காட்சி தரும் என்கிறார்.

தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
 நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
 பேரிலைப் பகன்றை பொதியவிழ் வான்பூ

-குறுந் 330 : 2-4