பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

539

இகன் முகை விரிந்தால் இதழ்கள் வட்டமாக நல்ல வெண்மையுடன் பால் பெய்த வட்டக் கிண்ணத்தை ஒத்திருக்கும் என்பார் கயமனார்.

“. . . . . . . . . . . .பேரிலைப்
 பகன்றை வால்மலர் பனிநிறைந் ததுபோல
 பால்பெய் வள்ளம் சால்கை பற்றி”
-அகநா. 219 : 3-5

மேலும், இப்பூ வெண்மையான புத்தாடைக்கு உவமிக்கப்படுகிறது.

“போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
 அகன்று மடிகலிங்கம் உடீஇ”
-புறநா. 393 : 18-19

இவ்வாறு எல்லாம் கூறப்படும் பகன்றைப்பூ நறுமணமில்லாதது. மேலும், கடுங்கள்ளின் அறுமணம் போன்று மூக்கை அறுக்கும் மணத்தை உடையது இப்பூ. இதனை ‘மணமிலகமழும்’ என்று மிக நயமாகக் கழார்க்கீரன் கூறுவார்.

“. . . . பகன்றைப் பொதியவிழ் வான்பூ.
 இன்கடுங் கள்ளின் மணமில கமழும்”
-குறுந் 330 : 4-5

நறுமணமின்மையால் சூடப்படாமல் விடுக்கப்பட்டமையின், இப்பூவைப் பிறர்க்கு ஒன்று ஈயாது வீழும் உயிரினத்திற்கு ஒப்பிடுகின்றார் புலவர் ஔவையார்.

“பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
 சூடாது வைகியாங்கு பிறர்க்கு ஒன்று
 ஈயாது வீயும் உயிர்தவப் பலவே”
-புறநா: 235 : 18-19

இருப்பினும், இதன் மிக வெள்ளிய நிறங்கருதிப் போலும் கள் விற்கும் மகளிர் இதனைக் கண்ணியாகச் சூடிக் கொள்வர் என்று கூறும் மலைபடுகடாம்.

“பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்”-மலைபடு. 459

நறுமணங் கமழாத இம்மலரையும் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் சேர்த்துள்ளார் .

“பகன்றைப் பலாசம் பல்பூம் பிண்டி” -குறிஞ். 88

பகன்றை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
(Bicarpellatae)
பாலிமோனியேலீஸ் (Polymoniales)