பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பாதிரி
ஸ்டீரியோஸ்பர்மம் சுவாவியோலென்ஸ்
(Stereospermum suaveolens,Dc.)

‘போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி’ என்று பாதிரிப் பூவைப் பாடினார் (குறிஞ். 74) கபிலர். ‘தேங்கமழ் பாதிரி’ என்பதற்குத் ‘தேன் நாறும் பாதிரிப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறினர். தேன் போன்று இனியமையான நறுமணம் கமழும் பாதிரிப் பூ என்று இதற்கு உரை கொள்ளுதல் பொருந்தும். ஏனெனில், பாதிரிப்பூ சிறந்த நறுமணம் உடையது பாதிரிப்பூவின் உள்ளகம் பிளந்து இதன் அமைப்பைக் கூர்ந்து நோக்கி அறிந்து உள்ளனர் சங்கப் புலவர்கள். பாதிரிப்பூவின் உள்ளமைப்பை, யாழின் பத்தரில் ஒட்டிய ‘பச்சை’க்கு உவமிக்கிறார் ஒரு புலவர். பாதிரிப்பூவின் அகவிதழில் காணப்படும் மயிர் ஒழுங்கினை, மகளிரின் வயிற்றில் அமைந்த மயிர் ஒழுங்கிற்கு உவமிப்பார் இன்னொரு புலவர்.

‘பாதிரி’ ஓர் உயரமான மரம். பாலை நிலப்பகுதியில் வளருமியல்பிற்று. எனினும் வேறிடங்களிலும் வளர்க்கப்படும். வேனிற் காலத்தில் கொத்துக் கொத்தாகப் பூக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : பாதிரி
உலக வழக்குப் பெயர் : பாதிரி, பாதிரி மரம்
தாவரப் பெயர் : ஸ்டீரியோஸ்பர்மம் சுவாவியோலென்ஸ்
(Stereospermum suaveolens,Dc.)

பாதிரி இலக்கியம்

வீதி வழியே பூக்காரி பாதிரிப்பூ விற்கிறாள். காதலனைப் பிரிந்து ஆற்றியிருக்கும் ஒரு தலைவி நெஞ்சம் சோர்கிறாள்.

 

73–35