பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

நெய்தல்-கருங்குவளை
நிம்பேயா வயலேசியா
(Nymphaea violacea, Lehm.)

‘வருணன் மேய பெருமணல் உலகம்’ எனப்படும் நெய்தல் நிலம் கடலும் கடலைச் சார்ந்த இடமும் ஆகும். கடலைச் சார்ந்த உப்பங்கழியிலும் நன்னீர் நிலைகளிலும் வளரும் நெய்தற் கொடி.“காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்” (குறிஞ். 84) எனக் கபிலர் கூறும் நெய்தலுக்குக் கருங்குவளை என்று பொருள் கண்டார் நச்சினார்க்கினியர். நெய்தல் நிலத்துச் சுனை மலராகிய நெய்தலைப் புலவர் பெருமக்கள் வியந்து கூறுவர். நெய்தல் ‘அல்லி’ இனத்தைச் சார்ந்தது.

நெய்தல் நிலத்தின் இயல்புகளை மாங்குடி மருதனார் விளக்கிக் கூறுகின்றார். (மது. கா. 315-326)

சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : கருங்குவளை, கருநெய்தல்
உலக வழக்குப் பெயர் : நெய்தல், குவளை, நீலம். நீலோற்பலம், பானல், காவி. சிந்திவாரம், நீலப்பூ
தாவரப் பெயர் : நிம்பேயா வயலேசியா
(Nymphaea violacea)

நெய்தல்-கருங்குவளை இலக்கியம்

தமிழ் நிலம் மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி என நான்கு வகைப்படும். முல்லையும் குறிஞ்சியும் தம்மியல்பு திரிந்து இயைந்த நிலத்தைப் பாலை என்பர். நெய்தல் நிலமென்பது கடலும், கடலைச் சார்ந்த இடமுமாம். மற்று நெய்தல் ஒழுக்கமாவது இரங்கலும், இரங்கல் நிமித்தமும் பற்றியது. கடலைச் சார்ந்த கழியிலும், நல்ல நீர் நிலைகளிலும் நெய்தற் கொடி வளரும்.