பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

558

சங்க இலக்கியத்

இவ்வாய்வுரை எழுதப் பெறுகின்றது. நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு வகைகளாகத் தொல்காப்பியம் கூறுமாயினும், உரிப்பொருள் கூறுங்கால் பாலையையுஞ் சேர்த்து ஐம்புலங்களை விரிக்கும். முல்லையும், குறிஞ்சியும் தம்மியல்பு திரிந்து, இயைந்த நிலத்தைப் பாலை என்பர். குறிஞ்சி நிலமென்பது மலையும், மலை சார்ந்த இடமுமாகும். குறிஞ்சி ஒழுக்கமாவது புணர்தலும், புணர்தல் நிமித்தமும் பற்றியது. இம்மலைப் பாங்கில் வளரும் குறிஞ்சிச் செடியைக் கொண்டு இந்நிலத்தைக் குறிஞ்சி நிலமென்றார் போலும். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் குறிஞ்சி நிலம், குறிஞ்சி ஒழுக்கம் , குறிஞ்சிச் செடி. குறிஞ்சிப் பண் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடியுள்ள பாக்கள் சங்க இலக்கியத்தில் மலிந்துள்ளன. பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு என்றதோர் நெஞ்சையள்ளும் செழுஞ் சுவைச் செம்பாடல் ஒன்றுண்டு. அதனை யாத்தவர் கபிலர். அவரைக் குறிஞ்சிக் கபிலர் என்று குறிப்பிடுகின்றது தமிழிலக்கியம். ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற் பொருட்டு அவர் இதனைப் பாடினார் என்ப. தமிழறிவுறுத்தலாவது, பண்டைத் தமிழிலக்கியக் களவியல் நெறியை அறிவித்தல் என்று கூறுவது ஒக்கும். 262 வரிகளில், தோழி அறத்தொடு நிற்றல் கூறும் இப்பாட்டின் கண், முப்பத்தைந்து வரிகளில் நூறு மலர்களை மிக அழகாகத் தொடுத்துள்ளமை வியத்தற்குரியது. சங்க விலக்கியத்துள் கூறப்படும் பூக்களில் பெரும் பகுதி இம்மலர்க் களஞ்சியத்தில் பயிலப்படுகிறது. மேலும், குறிஞ்சியொழுக்கம் பற்றிய பாடல்கள் அகநானூற்றில் 80 (இரண்டும். எட்டும்) கலித்தொகையில் - குறிஞ்சிக் கலி 29 பாக்களும், ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பற்றிய 100 பாக்களும் குறிஞ்சித் திணை பற்றியன. அன்றியும், குறுந்தொகை, நற்றிணை, கீழ்க்கணக்கு நூல்களில் திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது முதலியவற்றிலும் குறிஞ்சி பற்றிய பாக்கள் பலவுள.

மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியனது நாட்டின் ஐம்புலங்களின் இயல்புகளைப் பாராட்டிப் பாடியுள்ளார். குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளத்தை, 286 முதல் 301 வரையிலான வரிகளில் கூறுமுகத்தால், முதலில் அங்கு விளையும் தோரை, ஐவனம், வெண்ணெல் முதலிய நெற் பயிர்களைக் குறிப்பிடுகின்றார். இவற்றுடன் ஐயவியும் விளையும் என்றார். மலைப்பக்கத்தில் விளையும் தினைப் பயிரில் கிளியை ஓட்டும் ஆரவாரம் ஒரு பால் கேட்கும். பூத்த அவரையின் தளிரைத் தின்னும் ஆமாவை ஓட்டும் கானவரது ஆரவாரம் ஒரு பால். குறவன் தோண்டி மூடியுள்ள பொய்க் குழியில் விழுந்த பன்றியைக் கொன்றதனாலுள்ள ஆரவாரம் ஒரு பால், வேங்கை