பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

562

சங்க இலக்கியத்

மாயினும், சிறந்த பூ என்பதும் பொருந்துவதாகும். ‘குறிஞ்சி, நாள் மலர் புரையும் மேனி’ (நற். 301 : 2) என்னுமிடத்து ‘அன்றலர்ந்த குறிஞ்சிப் பூவின் நிறத்தை ஒத்த மேனியாள்’ என்று உரை கூறுவர். குறிஞ்சி மலர் பூத்த பின்னரும், இரண்டு மூன்று நாள் வரை அங்ஙனமே வாடாதிருக்கும் இயல்பிற்று. எனினும், அன்றலர்ந்த குறிஞ்சி மலரை ஒத்த மேனியாள் என்பது சிறப்புரையாகும்.

ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் என்னும் குறிஞ்சி 1898, 1910 ஆகிய ஆண்டுகளில் பழனி மலைப்புறத்திலும், 1887, 1899, 1910 ஆகிய ஆண்டுகளில் நீலமலையிலும் பூத்திருந்ததாக, பைசன் (Fyson) என்பவர் குறிப்பிடுகின்றார். 1956-ஆம் ஆண்டில் மைசூரிலிருந்து நீலகிரிக்கு (நீலமலை), யாம் தாவரவியல் மாணவர்களுடன் சுற்றுலா வந்த ஞான்று, ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் ஆகிய குறிஞ்சி நன்றாகப் பூத்திருந்தது. மலைப் பாங்கெல்லாம் ஒரே நீல நிறமாக விளங்கியது கண்டு, மட்டிலா மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் 1958ஆம் ஆண்டில், அதே வழியில் வரும் போது, ஒரு குறிஞ்சி மலரைக் கூடக் காண இயலவில்லை. ஆனால், 1958ஆம் ஆண்டில் தொட்டபெட்டா என்னும் மலைச் சிகரத்திற்கு ஏறிப் போகுங்கால், எண்ணாயிரம் அடி உயரத்திற்கு மேல் ஸ்ட்ரொபிலாந்தெஸ் கஸ்பிடேடாஸ் (S. cuspidatus) பூத்திருந்தததைக் காண முடிந்தது. சிறிது வெண்மை கலந்த நீலமான இப்பூ, குறிஞ்சிப் பூவன்று என்று தாவரவியலார் கூறுப. ஒருக்கால், இதனையே ‘கருங்காற் குறிஞ்சி மதனில் வான்பூ’ என்று (நற். 268) காமக்கண்ணியார் கூறினார் போலும்.

குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் இயல்பை மும்முறை கண்டு கூறும் பைசன் (Fyson) பாராட்டுதற்குரியர். குறிஞ்சி பூத்த ஆண்டில், மலை நாட்டு மக்கள் தம் நல்வாழ்வு குறித்து யாதானும் ஒரு திசையில் ஊர்ப்புறம் சென்று, காட்டைக் காவலர் (Kattai-Kavalar) எனும் சிறு தெய்வத்திற்கு வழிபாடு செய்வர் என்றும், அங்ஙனம் செய்யாவழி தமது நாடு, கன்று முதலியன இறந்தொழிவதுடன், பயிர் விளைவு குன்றுமென்றும், கோடைக்கானலின் பாங்குறையும் மக்கள் கூறுவதாக எஸ். சீத்தாராமையா (Indian Antiquity-vol. XL : 1911-68) எழுதியுள்ளார். 1958ஆம் ஆண்டில், நீலமலையில் குறிஞ்சி பூக்கவில்லையாயினும், கோடைக்கானலில் பூத்திருந்தது. சீலங்கா முன்னாள் அமைச்சர் சுன்னாகம் திரு. க. நடேசபிள்ளை அவர்கள் பன்னிரு ஆண்டுகட்கு ஒரு முறை குறிஞ்சி பூக்கும் போதெல்லாம்