பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

564

சங்க இலக்கியத்

கோடைக்கானலில் கோயில் கொண்டு அருளிய குறிஞ்சித் தெய்வமாகிய முருகப் பெருமானுக்கு, வழிபாடு செய்து வரும் வழக்கம் உள்ளது. 1958ஆம் ஆண்டில் அவர் கோடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலின் மலைப்புறத்தில் பூத்த குறிஞ்சிச் செடிகளின் புகைப்படமொன்றினைத் தமிழ்ப்பொழிலுக்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில் யாம் ‘தமிழில் தாவரம்’ என்ற தலைப்பில், குறிஞ்சிச் செடியினைப் பற்றி எழுதிய கட்டுரையைச் சேர்த்து, தமிழ்ப்பொழில் வெளியிட்டது.

பல ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் இயல்புடைமையின், இம் மலர் உகுக்கும் தேன் நல்ல மணமும், மிக்க இனிப்பும் உடையதாக இருக்கும். இது போல் இனிக்கும் குறுந்தொகைப் பாடல் ஒன்றுண்டு.

“கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
 பெருந்தேனி ழைக்கும் நாடனொடு நட்பே”

-குறுந். 3 : 2-3


“பெருந் தேன் இழைக்கும் நாட னொடு நட்பே” என்புழி, தேனீ தோன்றா எழுவாயாக நிற்பது போலப் பால்வரைத் தெய்வம் கட்புலனாகாது இருவரையும் கட்டி வைத்தது என்பதும், பெருந்தேன் என்ற அதனால் சிறு பூக்கள் என்பது பெறப்படுமாதலின், சிறு செயலாக நாடனுடன் இளநகை செய்த ஒன்று, பெருஞ் செயலாகிவிட்டதென்றும் குறிப்புத் தோன்ற, இயற்பட மொழிந்தாள் என்பதும் அறிந்து இன்புறுதற்குரியன.

குறிஞ்சி மலரின் தேன் மிக இனிப்பாக இருக்கும். இச்செடி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது. ஆகலின், இதன் மலரில் சுரக்கும் தேன்-அதாவது மலரின் செல்களிலுள்ள சாறு (cell-sap) மிக முதிர்ந்து, தேன் சுரப்பிகளின் மூலமாக வெளிப்படுவது இனியதாக இருப்பதில் வியப்பில்லை.

குறிஞ்சி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அக்காந்தேசி (Acanthaceae)