பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குமிழ்
மெலைனா ஏஷியாட்டிகா (Gmelina asiatica,Linn.)

நற்றிணையில் பயிலப்படும் ‘குமிழ்’ என்னும் புதர்ச்செடி குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. இதன் மலர் அழகிய மஞ்சள் நிறமானது. மலரைத் திருப்பிப் பிடித்துப் பார்த்தால் இது நல்ல நிறமுள்ள மகளிரின் மூக்கை ஒத்திருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : குமிழ்
பிற்கால இலக்கியப் பெயர் : குமிழ்
உலக வழக்குப் பெயர் : குமிழம், குமிளம்
தாவரப் பெயர் : மெலைனா ஏஷியாட்டிகா
(Gmelina asiatica,Linn.)

குமிழ் இலக்கியம்

குமிழம்பூவைக் குமிழ் என்று குறிப்பிடும் சங்க இலக்கியம். இது மலைப் பாங்கில் 1000 கி. மீ. உயரம் வரையில் வளரும் புதர்ச்செடி. சிறு மரமென்றும் கூறலாம். இது பல்லாண்டு வாழும் இயல்பிற்று. மலர் மிக அழகிய மஞ்சள் நிறமானது. அல்லியிதழ்கள் இணைந்து சற்று வளைந்த புனல் வடிவாயிருக்கும். கீழ்ப்புற அல்லியிதழ்கள் மூன்றும் சற்று நீண்டு நன்கு இணைந்தும், மேற்புற இரு இதழ்கள் இரு பக்கத்திலும் மடல் விரிந்தும் இருக்கும். இம்மலரைத் திருப்பிப் பிடித்துப் பார்த்தால் நல்ல இளமுறி நிறமுள்ள மகளிரின் மூக்கை வடிவாலும் வண்ணத்தாலும் ஒத்து இருக்கும். இரண்டு கண்களுக்குமிடையே மூக்கை ஓவியமாகத் தீட்டுவதை இளங்கோவடிகள்,