பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆரம்–சந்தனம்
சான்டாலம் ஆல்பம் (Santalum album,Linn.)

சங்க இலக்கியங்கள் சந்தன மரத்தை ‘ஆரம்’ எனவும், ‘சாந்தம்’ எனவும், ‘சந்தனம்’ எனவும் குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : ஆரம்
தாவரப் பெயர் : சான்டாலம் ஆல்பம்
(Santalum album,Linn.)

ஆரம்–சந்தனம் இலக்கியம்

சந்தன மரம் உயரமாக வளர்வது. குடமலை, பொதியில் மலைகளில் வளர்கிறது என்றும், மலையிடைப் பிறந்தும் இச்சந்தனம் மலைக்குப் பயன்படாது பிறருக்கே பயன்படுவது போல, மகளிரும் பருவத்தே பெற்றோருக்குப் பயன்படாது விரும்பினர் பாற் சென்று பயன்படுவர் என்று கூறும் தமிழிலக்கியம்.

“ஆரம் காழ்வை கடியிரும் புன்னை”-குறிஞ். 93

எனக் கபிலர், ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களோடு குறிப்பிடுகின்றார். ஆயினும், ஆரத்தின் மலரில் நறுமணமில்லை. சந்தனம் பரப்பும் நறுமணம் அதன் மரத்தில்தான் உள்ளது. இம்மரம் சாந்தம், சந்தனம் என்றும் குறிப்பிடப் படுகின்றது.

சந்தன மரம், குடமலை, பொதியமலை முதலான மலைகளில் வளரும் என்பதைப் புலவர்கள் கூறுவர்.

“குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்”-பட்டினப். 188
“. . . .   . . . .   . . . .  பொதியில்
 சூரூடை அடுக்கத்து ஆரம் கடுப்ப”
-குறுந். 376 : 1-2