பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

619

காழ் கொண்ட நடுப்பகுதியில் (Heart wood) தான் இந்த எண்ணெய் இருக்கும். புறப்பகுதியில் (Sap-wood) இருக்காது. எண்ணெய் சுரக்கும் காலத்தில், இம்மரத்தை இந்த நோய் தாக்குவதிலிருந்து தடுத்தற்குப் பலவாறான ஆய்வு முறைகள் கையாளப்படுகின்றன. எனினும், அவை நற்பயன் அளிக்கவில்லை. இந்நோய் மேலும் பிற மரங்களில் தொடராதிருக்கும் பொருட்டு, நோய் உள்ள மரத்தை வெட்டி அழிப்பதுதான் இந்நாளைய ஆய்வாளர்களின் அறிவுரை.

கடந்த பத்து ஆண்டுகளாக, அனைத்திந்திய மட்டத்தில் சந்தன மர ஆய்வு தீவிரமாக்கப்பட்டது. இதற்கு உயர் தனி ஆய்வாளராக திரு. கே. ஆர். வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர்தான் முதலில் சந்தன மரங்கள் கொள்ளிடக் கரையில் செழிப்பாக வளர்ந்து வருவதைக் கண்டார். இம்மரங்கள் ஏறத்தாழ அறுபது முதல் எழுபது ஆண்டு மரங்களாகக் காணப்பட்டன. இவற்றின் அடிமரத்தில் துளையிட்டு, நடுத்தண்டுப் பகுதியை எடுத்து ஆய்வு செய்ததில், இம்மரங்களில் சந்தன எண்ணெய் மிக அதிகமாகவும், நறுமணம் மிகுந்து இருப்பதையும் கண்டார். நன்கு முதிர்ந்த இம்மரங்களில் ஸ்பைக் நோய் உண்டாகவில்லை. இம்மரங்களின் பூக்களில், மைசூர் மலைக்காடுகளில் வளரும் சந்தன மரங்களின் தாதுக்களைக் கொண்டு வந்து, அயல் மகரந்தச் சேர்க்கை செய்தார். இதன் விளைவாக உண்டான விதைகளை முளைக்க விட்டு, இக்கன்றுகளைத் தக்க முறையில் வளர்த்து வருகின்றனர். இது போலவே, கொள்ளிடக் கரையில் வளரும் சந்தன மரத்தின் தாதுக்களைக் கொண்டு போய், மைசூர் மலைக் காடுகளில் வளரும் சந்தன மரத்தின் பூக்களில் தூவி, அயல் மகரந்தச் சேர்க்கை செய்து, அதன் பயனாக உண்டான விதைகளிலிருந்து சந்தன மரக் கன்றுகளை வளர்த்து வருகின்றனர்.

இவ்விரு வகையான சந்தன மரக் கன்றுகளும் வளர்ந்து முதிர்ந்த பின்னர், இவை இந்நோய்க்கு ஆளாக மாட்டா என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சந்தன எண்ணெய்க்காகவும், சந்தனக் கட்டைகளுக்காகவும் இம்மரங்கள் பாதுகாவலுடன் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சந்தன மரத்தின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 10 என ஐயங்கார் ஜி. எஸ். (1937) கணக்கிட்டுள்ளார்.