பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

காஞ்சி
ட்ரீவியா நூடிபுளோரா (Trewia nudiflora, Linn.)

தம்மைத் தாக்கியோரை எதிர்த்துப் போர் புரிவோர் காஞ்சி மலரைச் சூடிக் கொள்வர். இம்மலர் வேறு வகையானும் சிறப்பைப் பெற்றது.

காஞ்சி ஒரு குறுமரம். கொத்துக் கொத்தாகப் பூக்கும். இதன் நீல நிற மலர் அழகானது. மணமுள்ளது. மகளிர் அணிந்து கொள்வது.

சங்க இலக்கியப் பெயர் : காஞ்சி
தாவரப் பெயர் : ட்ரீவியா நூடிபுளோரா
(Trewia nudiflora,Linn.)

காஞ்சி இலக்கியம்

தம்மைத் தாக்கியோரை எதிர்த்துப் போர் புரியுங்கால் சூடப்படுவது காஞ்சி மலர். இதனாற் பெயர் பெற்றது காஞ்சித் திணை. தொல்காப்பியர் காஞ்சித் திணைக்குச் சான்றோர் அறிவுரைப் பொருளை-அதிலும் நிலையாமைப் பொருளை அமைத்துள்ளார்.

“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
 பாங்கருங் சிறப்பின் பல்லாற் றானும்
 நில்லா உலகம் புல்லிய நெறித்தே”
-தொல். புறத்: 18

இதன் அடிப்படையிலோ என்னவோ ‘முதுமொழிக் காஞ்சி’ என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல் எழுந்துள்ளது. சிறந்த பத்து, அறிவுப் பத்து முதலாகத் தண்டாப் பத்து ஈறாகப் பத்துத் தலைப்புகளில் நூறு அற நெறிகளைக் கூறுகின்றார் மதுரைக் கூடலூர் கிழார். மேலும் பத்துப் பாட்டில் மிகப் பெரிய பாட்டாகவுள்ள மதுரைக் காஞ்சி அரும்பெருங் கருத்துக்களை அறிவித்துக் கொண்டுள்ளது.