பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நெல்லி
எம்பிளிகா அபிசினாலிஸ் (Emblica officinalis,Gaertn.)

நெல்லி ஒரு மரம். இதன் இலைகள் சிறியவை. இதன் கனி மிகவும் சுவையானது. அதியமான் நெடுமான் அஞ்சி என்ற பேரரசன், தான் பெற்ற பெறுதற்கரிய பேறு வாய்ந்த, சாதலைத் தவிர்க்கும் நெல்லிக்கனியை ஔவையாருக்கு அளித்தனன். அதனைப் பெற்று உண்ட ஔவை அவனை ‘சாதற்குக் காரணமான நஞ்சுண்டும் நிலை பெற்றுள்ள நீலமணிமிடற்று ஒருவன் போல நீ என்றும் நீடினிது வாழ்க’ என்று வாழ்த்தினார். இக்குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

சங்க இலக்கியப் பெயர் : நெல்லி
தாவரப் பெயர் : எம்பிளிகா அபிசினாலிஸ்
(Emblica officinalis,Gaertn.)

நெல்லி இலக்கியம்

‘நெல்லி’ ஒரு மரம். மலைப்புறத்துச் சுரத்திடையேயும் வளரும். சிறிய பல இலைகளை உடையது. இதன் கனி முயலின் கண்ணுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. நெல்லிக்கனி சுவையுள்ள கனிகளுள் ஒன்று. முதிர்ந்த கனிகள் தாமே கீழே உதிர்ந்து விழும். சுரத்திடைப் போவோரெல்லாம் இக்கனியை நீர்நசை தீர்வதற்குச் கவைத்து உண்பர்

“சாத்து இடைவழங்காச் சேண்சி னமஅதர
 சிறுஇலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய்
 உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வின்று”

-அகநா. 291 : 15-17


“சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
 குறுவிழிக் கண்ண கூரல்அம் குறுமுயல்”

-அகநா. 284 : 1-2