பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

637

இக்குளவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க, இவ்வத்தி பூத்தாக வேண்டும். இதுவே இயற்கையின் அழகு.

அத்தி பூத்தவுடன், பெண் குளவி அத்திக் காயின் (பூங்கொத்து) மேற்புறத்திலுள்ள சிறு துளை வழியாக உட்செல்லும். அத்திப் பிஞ்சில் இத்துளை சிறு செதில்களால் மூடப் பெற்றிருக்கும். இப்பிஞ்சில் மலட்டுப் பெண் பூக்கள் இருக்குமானால், குளவி அதில் அமர்ந்து முட்டையிடும். இல்லாவிடில், மலட்டுப்பெண் பூக்களைத் தேடி அலையும். முட்டையிடப்பட்ட அந்த ஆண் அத்திகளின் உள்ளே (caprifigs) குஞ்சுக் குளவிகள் ஆணும், பெண்ணுமாக இருக்கும். அங்குள்ள ஆண் பூக்களில் உண்டாகும் தாதுக்களை உண்டு, இவை வளர்ந்து வரும், புணர்ச்சிப் பருவம் முடிந்த பின்னர், கருவுற்ற பெண் குளவிகள் வெளியே புறப்படுகின்றன. ஆண் குளவிகள் தாம் பிறந்த அந்த அத்திக் காயிலேயே இறந்துபடுகின்றன. வெளியில் ஊர்ந்து வரும் பெண் குளவிகளின் உடல் முழுவதும் தாதுக்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இப்பெண் குளவி பறந்து போய், அருகில் உள்ள அத்திப் பூந்துணரில் நுழையும். இது பெண் அத்திப் பூவுள்ள பிஞ்சானால், குளவியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் மகரந்தம் பெண் பூக்களில் உள்ள நீண்ட சூல் தண்டின் மேல்பட்டு மகரந்தச் சேர்க்கை உண்டாகும். ஆனால், அதில் நுழைந்த குளவியின் நோக்கம் நிறைவேறாது. இப்பூக்களின் சூல்தண்டு நீளமாக இருப்பதால், குளவி இப்பூவில் தங்கி முட்டையிட முடியாமல், மகரந்தச் சேர்க்கையைத் தான் அறியாமலே செய்து விட்டு, முட்டையிடுதற்குரிய வேறு அத்திப் பிஞ்சைத் தேடி வெளிப்படும். குளவி நுழைந்தது ஆண் அத்தியானால், அதிலுள்ள மலட்டுப் பெண் பூவில் முட்டையிட்டு, அதனுள்ளேயே இறந்து விடும். முட்டைகள் குஞ்சுகளாகி, இம்மலட்டுப் பெண் பூக்களின் சூலகத்திலிருந்து வெளியேறுகின்றன. ஆண் குளவிகள் இந்த ஆண் அத்தியிலேயே இருந்து சாகின்றன. குளவிகள் முட்டையிடுவதற்கும், மகரந்தம் வெளிப்படுவதற்கும், அத்தி மரம் ஆண் அத்திக் காய்களை உண்டாக்க வேண்டும். இல்லாவிடில், அத்தி பழுக்காது. குளவியும் முட்டையிடாது. இவ்விரு உயிர்களின் வாழ்க்கையும் முற்றுப் பெறும் பொருட்டு, இயற்கையன்னை கையாளும் எத்தனையோ வியத்தகு இயற்கை உண்மை நிகழ்ச்சிகளில் இதுவும் ஒனறு.