பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆல்
பைகஸ் பெங்காலென்சிஸ் (Ficus bengalensis,Linn.)

ஆல் இலக்கியம்

‘ஆல்’ எனவும், ‘ஆலம்’ எனவும் சங்க இலக்கியங்கள் கூறும் ஆலமரம் மிகப் பரவி வளரும் பெருமரமாகும். இதன் கிளைகள் நீண்டு தழைத்து நாற்புறமும் பரவி நிழல் பரப்பி நிற்கும். கிளைகளிலிருந்தும் அடி மரத்திலிருந்தும் விழுதுகள் கீழ் நோக்கி வளர்ந்து நிலத்தில் ஊன்றிப் பருத்து விடும். இவ்வேர்களுக்கு ஊன்றுவேர்கள் ‘ஸ்டில்ட் ரூட்ஸ்’ (Stilt Roots) என்று பெயர். தாய் மரத்தினின்று இக்கிளைகள் தறிக்கப்பட்டுவிடினும் கிளைகள் தாமாகவே வளர்ந்து வாழும் இயல்புடையன.

இறைவன், ‘அன்று ஆலின் கீழ் இருந்து அறமுரைத்தான்’ என்பர் மணிவாசகர்[1]. இதனால் இம்மரத்தைக் ‘கடவுள் ஆலம்’ என்று நற்றிணையில் பெரும்பதுமனார் கூறுவர் (நற். 199 : 1) சிவபெருமானை ஆலமர் செல்வன் என்று கூறும் சங்க நூல்கள்.

“ஆல்கெழு கடவுள்”-திருமு. 256
“ஆல் அமர் செல்வற்கு”-சிறுபா. 97
“ஆல் அமர் செல்வன் அணிசால் பெருவிறல்”
-கலி. 81 : 9
“ஆல்அமர் செல்வன் அணிசால் மகன்விழா”
-கலி. 83 : 9


முல்லை நிலத்தே ஏறு தழுவுதற்குத் திரண்ட ஆயர் குல மறவர் நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், மராமரத்தின் கீழும் உறையும் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப் பரவித் தொழுவிலே பாய்ந்தார் என்று கூறும் கலித்தொகை.

“துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்
 முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ”

-கலி. 101 : 13-14


  1. “அன்றாலின் கீழிருந்து அறமுரைத்தான் காணேடி”
    -திருவாசகம்: திருச்சாழல்