பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



639

இறைவன் தங்கியிருக்கும் இடமாவதன்றி, ஆலமரம் பேரரசர்கள் தமது பெரும்படையுடன் தங்கியிருக்கவும் நிழல் பரப்பும்[1]. பெரியவர் என்று பேர் படைத்த அலெக்சாண்டர், தமது ஏழாயிரம் போர் வீரர்களுடன் இளைப்பாறுதற்கு இடம் தந்தது ஆலமரம் என்பர்.

புணர்ந்து உடன் போகா நின்ற தலைவன், ‘வெப்பம் மிக்க இவ்விடைச் சுரத்தில் நடந்து வந்த களைப்பை ஆற்றுதற்கு, ஆல மரத்து நீழலில் அசைவு நீக்கிச் செல்லலாம்’ என்கின்றான்.

“ஆல நீழல் அசைவு நீக்கி”ーநற். 76 : 3

ஆல், அரசு, அத்தி முதலிய மரங்களும் பூத்துக் காய்ப்பனவே. எனினும், இவற்றின் பூக்கள் வெளிப்படையாகக் காணப்பட மாட்டா. இவை காண்பதற்கு அரியனவாதலின், ‘பூவாதே காய்க்கும் மரமும் உள’[2] என்ற கூற்றும் எழுந்தது.

ஆலமரத்தின் பூக்களைக் கொண்டது இதன் இளங்காயாகும். இது உருண்டை வடிவானது. சதைப்பற்றுள்ளது; உட்கூடு உடையது. உட்கூட்டின் ஓரங்களில் மலர்கள் உண்டாகும். மலர்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ்ந்த பின், இக்காய்கள் முதிர்ந்து பழமாகும். இங்ஙனம், மலர்களை அகத்தே கொண்டிருக்கும் ஆல மரங்களைப் புலவர்கள். ‘கோளி ஆலம்’ என்று கூறுகின்றனர்.

“கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து”-மலைப. 268
“முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்து”
-புறநா. 58 : 2
“முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து”-புறநா. 254 : 7

ஆலமரத்தின் கனி செந்நிறமானது. இது புதிய மட்கலத்தைப் போன்று செம்மையானது என்கிறார் ஓதலாந்தையார்.

“புதுக்கலத் தன்ன கனிய ஆலம்”-ஐங். 303 : 1


  1. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
    சிறுமீன்சினையினும் நுண்ணிதே யாயினும்
    அண்ணல் யானை அணிதேர்ப் புரவி
    ஆட்பெரும் படையொடு மன்னர்க்கிருக்க நிழலாகும்மே.
  2. நல். 35