பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

644

சங்க இலக்கியத்

தயாரிக்கப்படுகிறது. இதில் 22.5 விழுக்காடு சருக்கரை; 10 விழுக்காடு பலாச்சுளைச் சாறு; 7.5 விழுக்காடு சிட்ரிக் அமிலம்; 15 விழுக்காடு தண்ணீர்; சிறிது ( ஓர் அவுன்ஸ்) பொட்டாசியம் மெட்டாபைசல்பைட் சேரும் என்பர்.

செந்தமிழ் நாட்டின் சிறப்பு மிக்க முக்கனிகள் வாழை, மா, பலா எனப்படும். தனித் தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டி, நற்கருப்பஞ் சாற்றுடன் கலந்து, தேங்காய்ப் பாலுடன் விரவிக் காய்ச்சி, இளஞ்சூட்டில் இறக்கி வைத்து, ஐந்தமுதம் (பஞ்சாமிர்தம்) செய்து உண்ணத் தருகிறார்கள் வடலூர்ப் பெரு வெளியிலே. இதனைக் காட்டிலும் சுவையுடைத்தாம் இறைவன் தரும் அருளமுதம். இத்தாவரங்கள் அனைத்தும் சங்கப் பாடல்களில் பயிலப்படுவன.

பலா மரத்தைச் சங்கப் பாடல்கள் ‘பலவு’ என்று குறிப்பிடுகின்றன. பலாமரம் குறிஞ்சி நில மரமாகக் கூறப்படுகிறது.

“சாரற் பலவின்” -ஐங். 214 : 1
“பல்கோட் பலவின் சாரல்” -நற். 102 : 5
“நெடுவரை, முடவு முதிர் பலவு” -நற். 353 : 4
“பனிவரை நிவந்த பாசிலைப் பலவு” -புறநா. 200 : 1
“பலா அமல் அடுக்கம்” -அகநா. 8 : 7

குறிஞ்சி திரிந்த பாலையிலும் வளரும் என்பதை ஐங்குறுநூறு கூறும்.

“அத்தப்பலவின் வெயில் தின் சிறுகாய்”-ஐங். 351 : 1
“முடமுதிர் பலவின் அத்தம்” -நற். 26 : 6

பலா மரம் இல்லின் முன்பும் வளரும்; பருத்து வளரும், வேர்கள் வெளிப்பட வளரும்; கிளைத்து வளரும்; பசிய, அகன்ற இலைகளுடன், தழைத்து வளரும். மரத்தின் மேல் மிளகுக் கொடி படர்ந்து வளரும். பலா மரத்தின் நிழலில் எருமை பாயல் கொள்ளும் என்றெல்லாம் புலவர்கள் கூறுவர்.

“முன்றில் நீடிய முழவு உறழ் பலவின்” -அகநா. 172 : 11
“முன்றிற் பலவின் படுசுனை மரீஇ” -நற். 373 : 1
“தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட”
-பெரும்பா. 77