பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

666

சங்க இலக்கியத்

விரிந்து ஆண் பூக்களின் தாதுக்கள், பெண் பூக்களின் நுனியில் சேர்ந்த பின்றை, பெண் பூக்கள் பிஞ்சாகிப் பழமாகும்.

மலைப்பாங்கில் கலித்து வளரும் வாழையின் பழங்களை, மந்தி கவர்ந்துண்ணுவதைப் பெருமருதிளநாகனார் பாடுவர்.

“நெடுநீர் அருளிய கடும்பாட்டு ஆங்கண்
 பிணிமுதல் அரைய பெருங்கல் வாழைக்
 கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும்”
-நற். 251 : 1-4

தறுகண்மையை உடைய புலியின் அடியைப் போல வாழையினது வளைந்த காய் குலைகள் தோறும் தொங்குமென்பதைக் கலித்தொகையில் காணலாம்:

“கடுங்கண் உழுவை அடிபோல வாழைக்
 கொடுங்காய் குலை தொறுஉம் தூங்கும்”
-கலி. 43 : 24-25

வாழையினால் யானை வலியழிதலும், பிடி அதனை ஆற்றுவித்தலும் ஆகிய செய்தியைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

“சோலை வாழைச் சுரி நுகும்பினைய
 அணங்குடை யிருந்தலை நீவலின் மதனழிந்து
 மயங்கு துயருற்ற மையல் வேழம்”
-குறுந் 308 : 1-3

“வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்
 படுகடுங் களிற்றின் வருத்தம் சொலிய
 பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்”
-அகநா. 8 : 9-11

வாழையின் மலரைச் சூடிக் கொள்வதில்லையாயினும், குறிஞ்சிப்பாட்டில் இதன் பூ இடம் பெற்றுள்ளது!

“வாழை வள்ளி நீள்நறு நெய்தல்” -குறிஞ். 79