பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

676

சங்க இலக்கியத்

மற்றொரு யானையின் கோடு நுனியில் குருதி படிந்து சிவந்துள்ளது. அதனைக் கண்ட புலவர்கள், காந்தளின் முகை உடைந்து, அரும்பு நுனியில் சிவந்து காணப்படுவதற்கு ஒப்பிடுகின்றனர். இவர்களின் உண்மை அறிவியல் நுண்புல ஆழத்தை எண்ணி மகிழலாம்.

ஒரு சில அரும்புகள் போதாகி மலர்வதற்கு, வண்டின் சுமை வேண்டப்படும். வண்டு வந்தமரும் அமுக்கத்தால், போது அவிழ்ந்து விரியும்.

இதனை நன்கறிந்த செந்தமிழ்ச் சான்றோர்.

“குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள்
 வரியணி சிறகின் வண்டுண மலரும்”
-நற். 399 : 2-3
“நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள்
 கொங்குண் வண்டின் பெயர்ந்து”
-ஐங், 226 : 2-3
“சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்
 நறுந்தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி ”
-குறுந். 239 : 3-4
“மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
 கடும் பறைத் தும்பி. . . . . . . . ”
-பதிற். 67 : 19-20
“. . . . . . . . . . . . கார்தோற்றும்
 காந்தள் செறிந்த கவின்
 கவின் முகைகட்டு அவிழ்ப்ப தும்பி ”
-பரி. 18 : 34-36
“. . . . . . . . . . . . காந்தள்
 கொழுமடல் புதுப்பூ ஊதுந் தும்பி ”
-அகநா. 138 : 17-18

என்றெல்லாம் கூறுவாராயினர்.

அரும்பில் வண்டு வந்து முகர்வதும், போது மலர்ந்து விரிவதும் பெரும்பாலும் ஒரே காலத்தில் நிகழும்[1]. எனினும், இவற்றிற்கிடையே உள்ள இமைப்பொழுதும், வண்டுகளுக்கு நெடும் பொழுதாகத் தோன்றும். ஆதலின், வண்டுகள் போது விரியும் படியாக அதன் மேற் படிந்து மலரச் செய்யும் என்பதை,


  1. “விரியும் மணம்அவிழ்க்கும் மலர்முகிழ் மேல்எல்லாம்
    கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்”
    -மறைமலை அடிகள் : சாகுந்தல நாடகம்