பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

678

சங்க இலக்கியத்

என்பனவற்றால், காந்தள் மலர் கடவுளுக்கு உரியது என்று பரணரும், ‘சுரும்பு மூசாத அதன் மலர்களாலான கண்ணியைச் சென்னியில் சூடியவன் முருகப் பெருமான்’ என்று நக்கீரரும் கூறுவர். ஆதலின், காந்தள் கடவுள் மலர் என்பது விளங்கும். கடவுள் மலரில் வண்டு மொய்க்காது என்ற கொள்கை ஒன்று உண்டு. எனினும், ‘சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர்’[1] என்றாற் போல், காந்தள் மலருக்குக் கூறப்படவில்லை. இருப்பினும்,

“மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
 கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய் ”
-பதிற். : 67 : 19-20

என்ற அடிகளுக்கு ‘மலர்ந்த காந்தளினது மலரை, இது தெய்வத்திற்கு உரியதென்று அறிந்து, அதன்பால் நின்றும் நீங்காமல் ஊதிய விரைந்த பறத்தலை உடைய தும்பி.....’ என்று பழைய உரை கூறும். மேலும்,

“குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள்
 வரிஅணி சிறகின் வண்டுண மலரும்”
-நற். 399 : 2-3
“சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த
 கடவுட் காந்தளுள்ளம்”
-அகநா. 152 : 15-17

என வண்டினம் நுகரும் பொருட்டே காந்தள் மலரும் எனச் சங்க நூல்கள் கூறுமாறுங் காண்க.

காந்தள் என்றாலே கை என்று கொள்ளும்படி இலக்கியங்களில் உவமை அமைந்துள்ளது. கையிலும், விரல்களின் மருதோன்றிச் சாந்து இட்டுக் கொண்ட மெல்லிய மகளிர் கை என்பது மிகவும் பொருந்தும். துடுப்பாக நீண்ட காந்தள் மலர்க் காம்பு, மகளிரின் முன்னங்கை போன்றதென்பதை முன்னர்க் கண்டோம். பூக்காம்பு நேர் கோணமாக மடிந்திருந்தலின், பூ கவிழ்ந்து மலரும். இதனை,

“. . . . . . . . . . . .மலர் கவிழ்ந்து
 மாமடல் அவிழ்ந்த காந்தளஞ் சாரல்”
-நற். 14 : 6-7

என்று மாமூலனார் நன்கறிந்து கூறுவர். மலரில் மிக மெல்லிய, நீண்ட ஆறு இதழ்கள் விரியும். இதழ்கள் அடியில் வெளிர் மஞ்சள் நிறமாகவும், நுனியில் குருதிச் சிவப்பாகவும் இருப்பதால், வண்ணந்தீட்டிய கைவிரல்களுக்கு உவமிக்கப்படுகின்றது:


  1. பிங்.- நி. 2767