பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



689

கோடல் என்ற பெயரும் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, அச்சொற்றொடருக்கு ‘ஒள்ளிய சிவந்த கோடற்பூ’ என்றாரல்லது, வெண்கோடலினின்றும் வேறுபடுத்திச் செங்கோடல் ஒன்றுண்டு எனக் கருதினார் என்பது பொருந்துமாறில்லை. மேலும்,

“களிபட்டான் நிலையேபோல் தடவுபு துடுப்புஈன்று
 ஞெலிபுஉடன் நிரைத்த ஞெகிழ்இதழ்க் கோடலும்”
-கலி. 101 : 3-4

என்னுமிடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘கள்ளுண்டு களித்தலுற்றவன் நிலைமை போல, அசைந்து வளைந்து துடுப்புப் போலும் முன்கையை முன்னர் ஈன்று, பின்னர் தீயில் கடைந்து, அதிற்பிறந்த நெருப்பைச் சேர நினைத்தாற் போன்ற, அலர்ந்த இதழினை உடைய செங்காந்தாள் பூவும்’ என்று உரை கூறியுள்ளனர். இவ்விடத்து, தீக்கடைக் கோலுடன் நிரைத்தாற் போன்ற இதழ்கள் செங்காந்தளுக்கு உரியவாதலின், கோடல் என்பதற்குச் செங்காந்தள் என்று உரை கூறுவது பொருந்தும். இதனால் இங்ஙனம் அடையெடுத்து வருமிடத்துக் கோடல் என்பது செங்காந்தளைக் குறிக்குமாயினும், கோடல் என்பது பெரிதும் வெண்கோடலைப் பற்றியதென்று அறியலாம். மேலும் இது வெண்கோடல் என்றும் பேசப்படும். இதனை,

“வரிவெண்கோடல் வாங்கு குலை வான்பூப்
 பெரிய சூடிய கவர்கோல் கோவலர்”
-அகநா. 264 : 3-4

என்று உம்பற்காட்டு இளங்கண்ணனார் கூறாநிற்பர். இதனால் கோடல் குலையாகப் பூக்கும் என்பதும், இதழ்களில் வரிகள் காணப்படும் என்பதும், இது வெண்கோடல் என்று கூறப்படுமென்பதும், ‘வான்பூ’ என்றமையின் வெண்மை நிறம் வலியுறுத்தப்படும் என்பதும், ‘பெரிய’ என்றமையின், மலர் சற்றுப் பெரியதாக இருக்கக் கூடுமென்பதும் பெற்றாம்.

பசிய கோடல் செடி மலைப்பாங்கில் தண்ணியவிடங்களில் வளரும். இதனைக்

“கமழ்தண் தாதுஉதிர்ந்து உகஊழ்உற்ற கோடல்வீ
 இதழ்சோரும் குலைபோல இறைநீவு வளையாட்கு”
-கலி. 21 : 13-14
“தண்கமழ் கோடல் தாது பிணிஅவிழ” -அகநா. 154 : 7
“வெண்குடையாம் தண்கோடல்”[1]
“தண்கமழ் கோடல் துடுப்புஈன்”[2]


  1. திணை. மா. நூ. 119 : 4
  2. திணை. ஐ. 21
 

73-44