பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கைதை–தாழை
பாண்டனஸ் டெக்டோரியஸ்
(Pandanus tectorius,Linn.)

கைதை–தாழை இலக்கியம்

‘கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை’ என்ற குறிஞ்சிப் பாட்டடியில் (83) வரும் ‘கைதை’ என்பதற்கு நச்சினார்க்கினியர் தாழம்பூ என்று உரை கூறியுள்ளார்.

தாழை தளவம் முட்டாள் தாமரை’ என வரும் குறிஞ்சிப் பாட்டடியில் (80) தாழை என்பதற்கு அவர் ‘தெங்கிற்பாளை’ என்று உரை கூறினார். இவர் இங்ஙனம் உரை வகுத்ததின் காரணம்.

“வாழை முழுமுதல் துமியத் தாழை
 இளநீர் விழுக்குலை உதிர”
-திருமுரு. 307-308

என்று நக்கீரர் கூறியதேயாம். அதனால் ஈண்டு ‘தெங்கினது இளநீரை உடைய சீரிய குலை உதிர’ என்று அவர் உரை கூறினார். எனினும்,

“வீழ்த்தாழைத்தாள் தாழ்ந்த” -பட்டி. 84
“மடல் தாழை மலர் மலைந்தும்” -பட்டி. 88

என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் தாழையைக் குறிப்பிடுதலின், நச்சினார்க்கினியர் ‘விழுதை உடைய தாழையின் அடியிடத்தே’ என்றும் ‘மடலை உடைய தாழையினது மலரைச் சூடியும்’ என்றும் உரை வகுத்தார். ஆதலின் தாழையின் அடி மரத்தில் விழுது உண்டென்பதும், தாழை மடலாகப் பூக்கும் என்பதும் கூறப்பட்டமை காண்க. மேலும்,

“வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
 குருகுளர் இறகின் விரிபுதோடு அவிழும்”
-குறு. 228 : 1-2

“வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல்” -நற். 78 : 4